Breaking News

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னை மாற்றவேண்டும்

ஒருவரைப் பற்றி அறியவேண்டுமாயின் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்துப் பார்க்கவேண்டும் என்பது ஒரு பொது நியதி.நல்ல மனிதர்களாக இருந்த பலர் பணம், பதவி, அதிகாரம் என்பவற்றால் மிக மோசமாகிப்போன வரலாறுகள் நிறையவே உண்டு. 

அப்படியானால் நல்ல மனிதர் என்போர் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் தமது உயர்ந்த பண்பு நிலையில் இருந்து ஒருபோதும் பிறழ்வடைய மாட்டார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாற்றமடைந்தாலும் மேன் மக்கள் மேன்மக்களாகவே வாழ்வதென்பதும் இந்த உலகம் நமக்கு உணர்த்திய உண்மை. 

இந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ இயலில் நல்லவர் என்று அவரோடு கற்றவர்கள், உடன் பழகியவர்கள் சொல்வர். இதை இப்போது நாம் சொன்னால் சவுதித் தண்டனைப்படி சொன்ன வரை கல்லால் அடித்துக் கொல்லுங்கள் என்று கோ­ம் கேட்கும். அந்தளவுக்கு அவர் தமிழ் மக்களின் எதிரியாகிப் போனார்.

ஜனாதிபதி என்ற அதிகாரப் பதவி அவருக்குக் கிடைத்தபோது அவர் முதலில் தனது நல்ல குணத்தை இழந்தார். அவரின் சகோதரர்கள்; பந்தம் பிடிப்போர் எனப் பலரும் சேர்ந்து மகிந்த ராஜபக்­வை தவறான பாதைக்கு இட்டுச் சென்றனர். இதன் காரணமாக வன்னிப் போரில் தமிழ் மக்கள் வதைபடுவது கண்டும் அவர் இரும்பு மனிதராக இருந்தார்.

போரின் பின்பு வட பகுதியில் அமைத்த வீதிகள், புகையிரதப் பாதைகள், வைத்தியசாலைகள் என்பன தான் செய்த பாவத்திற்கான பரிகாரமாக மகிந்த ராஜபக்­ கருதியிருக்கலாம். வட பகுதிக்கான வீதி நிர்மாணத்தில், புகையிரதப் பாதை அமைப்பதில் அவரிடம் கஞ்சத்தனம் இருக்கவில்லை என்ற கருத்தும் இருக்கவே செய்கிறது. 

எதுவாயினும் பிள்ளையை பறிகொடுத்த தாயின் பரிதவிப்பில் உடைந்த வீதியும் காப்பற் வீதியும் ஒன்றாகவே புலப்படும் என்ற உண்மையையும் இங்கு சொல்லித்தானாக வேண்டும். எதுவாயினும் அதிகாரம் கிடைத்ததால் நல்ல மனிதர்கள் மேசமானவர்களாக மாறியது போல மோசமானவர்களாக இருந்த பலர் கிடைத்த பதவியால் திருந்திய மனிதர்களாக-புனிதர்களாக மாறினர் என்ற செய்திகளும் நிறையவே உண்டு.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க அரிசி கொடுத்த ராசா, உமி கொடுத்த ராசா இதில் நல்லவர் யார் என்ற அளவிலேயே சமகாலத்து நிலைமை உள்ளது. உமி தருபவரை விட அரிசி தந்த ராசா பரவாயில்லை அல்லவா? என்று திருப்திப்படும் அளவில் தான் நாட்டுத் தலைவர்கள் இருக்கின்றனர் என்ற அடிப்படையில் நல்லவர்களாக இருக்கின்றவர்கள் அரசியல் என்னும் சாக்கடையில் வீழ்ந்து எழும் போது நடிப்பும், நாடகமும் ஊழலும் போலித்தனமும் ஒட்டிக் கொள்கிறது. இதில் இருந்து விடுபடுவது முடியாது என்றாகி விட்ட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒரு வித்தியாசமானவராக அவதானிக்கப்படுகிறார்.

தனக்கு இருந்த அதிகாரங்களைக் குறைப்புச் செய்தது மட்டுமன்றி நான்கு ஆண்டுகளுக்குப்பின் ஒரு நிமிடமும் ஜனாதிபதி என்ற ஆசனத்தில் இருக்க மாட்டேன் எனப் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.  எனவே ஜனாதிபதி மைத்திரி நல்லவர் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் ஜனாதிபதி மைத்திரியோடு இருக்கின்ற பிரதமர் ரணில் தொடர்பில் நல்ல எண்ணம் குறைவாகவே உள்ளது.

வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனுடன் கதைக்க மாட்டேன் என்ற குதர்க்கம்; அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் ஏறுமான பேச்சு; பிரபா கணேசனுடன் தர்க்கம் என்பன ஒரு நாட்டின் பிரதமருக்கு உரிய பண்பு நிலையாக தெரியவில்லை. ஆக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையேல் பிரதமர் ரணிலை விட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ எவ்வளவோ மேல் என்ற கருத்து நிலை இந்த நாட்டில் பலமாகி விடும் கவனம். 

(05.02.2015) வலம்புரி ஆசிரியர் தலையங்கம்