முல்லைத்தீவில் பொதுமக்கள் காணியில் சட்டவிரோத விகாரை
முல்லைத்தீவு கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமாக விகாரை அமைக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலைக் காணியின் ஒரு பகுதியையும், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து தேரர் ஒருவரால் படையினர் துணையுடன் குறித்த விகாரை அமைக்கப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம்சுமத்துகின்றனர்.
காணிகள் அபகரிக்கப்பட்டு விகாரை கட்டப்படுவதையடுத்து, அந்த காணி உரிமையாளர்கள் நேற்று அங்கு சென்றுள்ளனர். காணிகளிற்கான ஆவணங்களையும் எடுத்துச் சென்றிருந்தனர். மக்கள் அங்கு சென்றபோது, 20 க்கும் அதிகமான படையினர் விகாரை கட்டும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். விகாரையை கட்டும் தேரருடன் உரையாட வேண்டும் என மக்கள் கேட்டபோது,
அவர் அங்கில்லை என படையினர் பதிலளித்துள்ளனர். இதனையடுத்து, காணி உரிமங்களை படையினரிடம் காட்டி, கட்டுமானப்பணிகளை நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். உயர் அதிகாரியின் பணிப்பின் பேரிலே அங்கே வந்துள்ளோம், அவர்களிடம் சென்று பேசுமாறு அங்கிருந்த படையினர் பதிலளித்துள்ளனர். தேரர் கொழும்பு சென்றிருப்பதாக கூறி விட்டு விகாரையின் கட்டுமான பணிகளைத் தொடர்ந்தனர்.
இதனால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மக்கள் திரும்பி வந்துள்ளனர். இந்த விடயத்தில் அரசியல் தலைவர்கள் தலையிட வேண்டுமென்று கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.