மாணவி படுகொலையுடன் தொடர்புடையோரை பாதுகாப்பது யார் என்பது விரைவில் அம்பலமாகும்
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்களை பாதுகாக்க தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்வோர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் யாரென்பது விரைவில் அம்பலமாகும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு நேற்று சபையில் தெரிவித்தார்.
உயர் கல்வி மாணவர்களுக்கு பியர் வழங்கி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் நிலைமை வடக்கில் தோன்றியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கல்வியமைச்சு தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே சந்திரகுமார் முருகேசு எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் புங்குடுதீவு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துடன் சுவிஸ் பிரஜையொருவரும் தொடர்புபட்டுள்ளார். அவரை பாதுகாக்கவும் விடுதலை செய்யவும் தமிழர்களின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்வோர் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்துடன் சட்டத்துறை நிபுணர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளார். இவ்வாறான ஒரு கொடூரம் இனி எந்தவொரு மாணவிக்கும், பெண்ணுக்கும் இடம்பெறக்கூடாது. இந்த கொடூரத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி கண்டு வீதியில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் இவ் எழுச்சி தலைதூக்கியுள்ளது.
வடக்கில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் போது சில சக்திகள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளன. மக்கள் எழுச்சியை கொச்சைப்படுத்தும் விதத்தில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் யாரென்பதை விரைவில் வெளியிடுவோம். குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சிப்பவர்கள் யாரென்பதையும் வெளியிடுவோம்.
வடக்கில் தேர்தல் காலங்களில் உயர்தர மாணவர்களுக்கு பியர் வழங்கி தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்வது பின்னணியில் உள்ளோர் தொடர்பாக ஆதாரங்கள் உள்ளன. வடக்கு முதல்வரும், மாகாண சபை கல்வி அமைச்சரும் பாடசாலை வைபவங்களில் கலந்து கொண்டு அரசியல் பேசுகின்றனர்.
கிராம பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. பற்றாக்குறை உள்ளதை மக்கள் வடமாகாண முதலமைச்சருக்கும் கல்வி அமைச்சருக்கும் முறையிட்டால் அதனை தீர்த்து வைக்காது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கூறுகின்றனர். இது தான் வடக்கின் இன்றைய கல்வி நிலை என்றார்.