Breaking News

புலிக்கொடி புரளி பரப்பி தெற்கு மக்களை தவறாக வழிநடத்துகிறார் மகிந்த – ருவான் குற்றச்சாட்டு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவோ எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களோ கூறுவதுபோல, வடக்கில் எங்குமே, கடந்த மே 18ம் நாள் புலிக்கொடி பறக்கவிடப்படவில்லை என்று இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“யாழ்ப்பாணத்தில் மாணிவி ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து, வேறு நாடுகளில் நடந்த நிகழ்வுகளின் காணொளி என்பனவற்றைப் பயன்படுத்தி சில அரசியல் மற்றும் கடும்போக்கு சக்திகள் தெற்கிலுள்ள மக்களைத் தவறாக வழிநடத்த முனைகின்றனர்.

இதுகுறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஆறாவது ஆண்டு நினைவு நாளன்று வடக்கில் சில பகுதிகளில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலிக்கொடி ஏற்றியதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.

வடக்கு, கிழக்கில் அவ்வாறான எந்தவொரு நகழ்வும் இடம்பெறவில்லை என்பதை, புலனாய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. தமது அரசியல் நலன்களை அடைவதற்காக, ஊடகங்கள், சமூக வலையமைப்புகள் மூலம், குறிப்பிட்ட சிலர் இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.