Breaking News

தேர்தல் முறை மாற்றம் இனவாதத்தின் புதிய அத்தியாயம்!


எம்மை வஞ்சிக்க உத்தேசிக்கும் தேர்தல் முறை மாற்றம் இந்த நாட்டிலே தொன்று தொட்டு நிலவும் இனவாதத்தின் புதிய அத்தியாயம் ஆகும், என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். 

ஆனால் எமது கடந்த கால தலைவர்களை போல் நாங்கள் ஒரு கோப்பை கோப்பிக்கு மயங்கி தமிழர்களின் உரிமைகளை தாரை வார்க்கப்போகின்றவர்கள் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆகவே நாங்கள் இனிமேல் ஏமாற தயாரில்லை. தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடும்போது, ஒரு பெரும்பான்மை தலைவர், மனோ நீங்கள் சாகும்வரை தலைவராகவும், எம்பியாகவும், அமைச்சராகவும் இருக்க முடியுமே என்று சொல்லி பார்த்தார். 

அதன் அர்த்தம் எனது பதவியை மட்டும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருங்கள் என்பதாகும். நான் தனிப்பட்ட முறையில் எம்பியாவதும், அமைச்சராவதும் பற்றி எனக்கு பிரச்சினையில்லை. ஆனால், அதைவிட எங்கள் இனத்தின் விகிதாசாரத்துக்கு ஏற்ப எங்களை பிரதிநிதித்துவம் செய்யும் எண்ணிக்கையில் எம்பிக்கள் இருக்க வேண்டும். 

அதுதான் என் நோக்கம் என்று நான் அவருக்கு பதில் சொல்லி விட்டேன் என மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.  ஜனநாயக மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலமும், கூட்டமும் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நடைபெற்றது.  பின் கொச்சிக்கடை ஜம்பட்டா ஒழுங்கை சந்தியில் மேதின கூட்டம் இடம்பெற்றது.  இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கட்சித்தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 

இன்றைய எங்கள் ஊர்வலத்தையும், கூட்டத்தையும் பார்த்து எங்கள் எதிரிகளும், நண்பர்களும் எங்கள் ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் சக்தி என்ன என்பதை அறிந்துகொண்டிருப்பார்கள். மே தினத்தின் பயன்பாடு காலவோட்டத்துக்கு ஏற்ப மாறியுள்ளது. 

தொழிலாளர்களின் விடுதலை வேட்கையை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட உழைப்பாளர் தினம், இன்று அடக்கி ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் தினமாக உருமாறியுள்ளது.  இன்று இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் உடனடி சவால்கள் இரண்டு ஆகும். ஒன்று, அவசரகதியில் உத்தேசிக்கப்படும் தேர்தல் முறை மாற்றம் ஆகும். இரண்டாவது, மீண்டும் தலையெடுக்க நினைக்கும் சர்வதிகார இனவாதம் ஆகும். 

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நாம் இன்று ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழ், முஸ்லிம் கட்சிகள் மட்டுமல்ல, ஜேவிபியும் எம்முடன் கரங்கோர்த்துள்ளது.  எதிர்வரும் வாரங்களில் நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உத்தேசித்துளோம். எமது ஒன்றுபட்ட சக்தியின் மூலமாகவே இந்தநாட்டிலே தொன்று தொட்டு நிலவும் இனவாதத்தின் புதிய அத்தியாயமான அடாவடி தேர்தல் முறை மாற்றம் என்ற அபாயத்தை நாம் வெற்றிக்கொள்ளலாம். 

இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கின்றோம். இதில் எவராவது தனிவழி சென்று காட்டிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அவர்களை மக்கள் தேர்தல் வேளைகளில் உரிய முறையில் கவனிக்க வேண்டும்.  இரண்டாவது சவால் மீண்டும் தலையெடுக்க நினைக்கும் சர்வதிகார இனவாதம் என்று சொன்னேன். ஏன் சர்வதிகார இனவாதம் என்று சொன்னேன் என்றால், அதற்கு காரணம் உண்டு. 

இந்த நாட்டில் இன்று எங்களுடன் அரசியலில் கூட்டு குடித்தனம் செய்பவர்களும் இனவாதிகள்தான். ஆனால், மஹிந்தவின் இனவாதம் சர்வதிகார அம்சங்களை கொண்டது. இவர்களுடன் பேசி தீர்க்க முயற்சிக்கலாம். மகிந்தவுடன் பேசக்கூட முடியாது. அந்த ஆட்சி, நமக்கு எதிராக இராணுவ பயன்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்ட ஆட்சியாகும். 

எனவே இந்த பேசக்கூடிய இனவாதிகள் சிலருடன் சேர்ந்து பேசக்கூட முடியாத சர்வதிகார இனவாதி மஹிந்தவை தோற்கடித்தோம். இப்போது அவர் மீண்டும் எழுந்து வர முயல்கிறார்.  அதற்கு இடம் கொடுக்க முடியாது. மீண்டும் தலையெடுக்க நினைக்கும் சர்வதிகார இனவாதத்தின் தலையில் மீண்டும் அது எழும்ப முடியாத வண்ணம் ஓங்கி அடிப்போம். 

எனவே கொழும்பிலும், கண்டியிலும், நுவரேலியாவிலும், பதுளையிலும், இரத்தினபுரியிலும், கம்பஹாவிலும் வாழும் எம்மவர்களின் உரிய பிரதிநிதித்துவங்களை உறுதி செய்து, எழுந்து வரும் சர்வதிகார இனவாதத்தையும் கூண்டோடு வெட்டி சாய்க்க இந்த எங்கள் மே தின நிகழ்வில் உறுதி பூணுவோம், என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.