Breaking News

மஹிந்தவின் ஆட்சியில் தொலைந்தோரை மைத்திரியின் ஆட்சியிலும் தேடும் தாய்மார்

“மயூரன், 85 ஆம் ஆண்டு, 6 ஆம் மாசம் 21 ஆம் திகதி பிறந்தவன். ஏழாம் ஆண்டோட பள்ளிக்கூடம் போகாமல் விட்டிட்டான். அவனுக்குப் படிக்கப் பிடிக்காமல் போயிற்று,” என்று தன் மகன் பற்றிய அறிமுகத்தைத் தருகின்றார் ரவீந்திரன் றோஸ்மலர் என்கிற 50 வயதுத் தாய்.

தம் பிள்ளைகளைத் தொலைத்துவிட்டு தேடி அலையும் அம்மாக்களில் றோஸ்மலர் ரவீந்திரனும் ஒருவர். இந்தப் பதிவுக்கான கதை தொடங்கும்போது அவர் பிரதேச வைத்தியசாலை ஒன்றின் நோயாளர் பிரிவில், நீண்ட வரிசையின் கடைசி நுனியில் இருக்கிறார். எதேச்சையாகச் சந்தித்துக்கொண்ட இடத்தில்தான் தன் மகன் பற்றிய பேச்சைத் தொடங்கினார். வரிசையும் மெல்ல மெல்ல நகர அவரது மகன் பற்றிய கதையும் நகர்ந்தது.

“சரி படிக்காட்டிலும், தொழில் ஏதும் தெரிஞ்சி கொள்ளட்டும் எண்டு மெக்கானிக் கராச் ஒண்டில வேலை பழகச் சேர்த்துவிட்டன். கொஞ்ச நாளையில அதுவும் பிடிக்கேல்ல எண்டு வீட்டுக்கு வந்திட்டான். வந்ததும், தான் தையல் பழகப் போறதாகசொன்னான். சரியெண்டு தையல் பழக அனுப்பினன்”.

அதற்குப் பிறகு சற்று அமைதி காக்கிறார் றோஸ்மலர் அம்மா. அங்குமிங்கும் பார்க்கிறார். அருகில் இருப்பவர்கள் மீது நம்பிக்கை தெரிவதை அவரின் கண்கள் நிதானித்துக்கொள்கின்றன. “இயக்கத்துக்குப் போயிற்றான். அப்ப அவனுக்குப் பதின் மூன்று வயசுதான். பிறகு நானும், அப்பாவும் போய் கதைச்சி வயசு குறைவெண்டு சொல்லி, பணிஸ்மெண்ட் குடுத்து வீட்டுக்கு அனுப்பீட்டாங்கள். கொஞ்ச நாள் வீட்டிலதான் இருந்தவன். கடற்தொழிலுக்குப் போனவன். அதுக்கிடையில ஒரு காதல் வந்திற்று அவருக்கு’.

பேசிக்கொண்டிருந்தவரின் கண்கள் கொஞ்சம் பிரகாசிக்கின்றன. தன் மகனின் காதல் பற்றிக் கதைக்கத் தொடங்குகையில் தன் பால்ய காலத்துக்குத் திரும்பிவிடுவாரோ என்று சந்தேகிக்கும் நொடியில், அவர் மகனின் உலகத்துக்குள்ளேயே பேசத் தொடங்குகின்றார்.

“இப்பிடியே இருக்கேக்குள்ளதான் சண்டையும் வந்தது. அப்ப பிள்ளையள் எல்லாரையும் இயக்கத்துக்குக் கூப்பிட்டுச்சினம். நானும் பயத்தில மயூரன் காதலிச்ச பிள்ளையின்ர வீட்டுக்காரரும் கதைச்சி, கலியாணத்தக் கட்டி வச்சம். சண்டை எங்கட ஊருக்கு வரேக்க மகன் ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருந்தான்.”

“சண்ட முடிஞ்சதும், வவுனியா முகாமுக்குப் போனம். ஓமந்தையில மகனக் கூட்டிக்கொண்டு போய் ஆமிக்காரர் விசாரிச்சவ. படமும் எடுத்தவையாம். பிறகு விட்டிட்டினம். நாங்கள் முகாமுக்குப் போனதும், அங்க வந்து பிடிச்சிக்கொண்டு போயிற்றாங்கள். முதல் நெளுக்குளத்தில வச்சிருந்தவ. பிறகு, வெலிக்கந்தவில வச்சிருந்திட்டு, விடுறத்துக்கு 15 நாளைக்கு முதல் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில கொண்டுவந்து வச்சிருந்தவ. 2010,11 ஆம் மாசம், 17 ஆம் திகதி விட்டவ.

அவர் இருந்த வரிசை நகர்கிறது. எழுந்து இடம்மாறச் சொல்கின்றனர் அயலவர்கள். பேச்சை அப்படியே நிறுத்திக்கொண்டு அடுத்த வரிசைக்கு மாறுகின்றார். தொடர்கிறது பேச்சு,

“2010 இல உறவிணைப்பின் மூலமா மருமகளின்ர அம்மாக்கள் இருந்த கதிர்காமம் முகாமுக்கு போனம். அங்கயிருந்து வெளியிடங்களுக்கு வேலைக்குப் போகக்கூடியதாயிருந்தது. நாங்களும், மயூரனையும் கூட்டிக்கொண்டு, பூநகரிக்கு வயல் வேலைக்குப் போனம். அங்க தங்கி நிண்டு அரிவுவெட்டுறதுதான் வேலை. கொஞ்சக் காலம் அங்கயே தங்கி நிண்டு வேலைசெய்தம். ஒரு கட்டத்தில அரிவுவெட்டு வேலைகளும் குறைஞ்சிட்டு. மயூரன் தான் கிளிநொச்சி பக்கம் போய், சாப்பாட்டுக் கடை ஏதும் பாத்து வேலைக்குப் போகப் போறதா சொன்னான். எங்கட சொந்தக்காரப் பெடியன் ஒருத்தன், தான் முதல் வேலைசெய்த கடைக்குக் கூட்டிக்கொண்டுபோய், கேட்டுவிடுறன் எண்டு சொன்னான். ஆனால் எனக்கு மகன் சாப்பாட்டுக்கடைக்கு வேலைக்குப் போறது பிடிக்கேல்ல. வேறவழியும் இருக்கேல்ல. வயல் வேலையும் குறைஞ்சதால அது நல்லாதாப்பட்டுது. போகச் சொன்னன். 2011 ஆம் ஆண்டு 2 ஆம் மாசம் 28 ஆம் திகதிதான் போனவன்.

“மகனக் கிளிநொச்சிக்கு வேலைக்குக் கூட்டிக்கொண்டு போன பெடியன் பிறகு வந்து சொன்னது, சாப்பாட்டுக் கடைக்காரர், மயூரன் வேலை செய்யிறத பாத்துத்தான் சம்பளம் குடுப்பம் எண்டிட்டாங்கள். அதால மயூரன் அங்க வேலைக்குப் போகேல்ல. முகாமுக்குப் போறான் எண்டு வந்து எங்களிட்ட சொன்னது.

“முகாமுக்குப் போனவன் போன் எடுப்பான்தானே எண்டு காத்திருந்தன். ஆனால் எடுக்கேல்ல. இரவு 7 மணி போல எடுத்துப் பாத்தன், மகனின்ர போன் வேலை செய்யேல்ல. மருமகளுக்கு எடுத்துக்கேட்டால், இங்க வரேல்ல எண்டுறா. அடுத்தநாள் அப்பா, முகாமுக்குப் போய் தேடினவர். செட்டிகுளத்தில பொலிஸிட்ட பதியப் போக, கிளிநொச்சி பொலிஸ்ல பதிய சொல்லி அனுப்பிற்றாங்கள். அங்க பதிவெடுத்துப் போட்டு, மகன் தங்களிட்ட வந்தால் உங்களிட்ட ஒப்படைக்கிறோம் எண்டு சொல்லி அனுப்பீட்டினம். அதுக்குப் பிறகு செஞ்சிலுவை சங்கம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்று நிறைய இடங்களில் பதிஞ்சம், எல்லா இடமும் தேடினம். ஆமிக்காரர், சீ.ஐ.டிக்காரர், விசாரைணக்குழு எண்டு கனபேரிட்ட போனன். ஏல்லாரும் பதிவெடுத்தவ. மகன் ஒரு இடமும் இல்ல”.

இவ்வாறான பேச்சுக்களுக்கிடையில் இயல்பாக எழும் அமைதி இங்கேயும் நிகழ்கிறது. ஆனாலும் பலதரப்பட்ட மனிதர்கள் அடங்கிய வரிசை சலசலப்போடு நகர்கின்றது. அந்த வரிசையினடத்து, இந்த மாதிரியான பேச்சுக்களின் அமைதியின் பெறுமதியை தரிசிக்கவியலாதுதான். ஏனெனில் இந்த நிலத்தில் எல்லா துயரங்களும், கண்ணீரும் அவசரத்தில் கரைந்து போகின்றன. விரைவாகவே மயூரனின் அம்மா முதல் இருக்கை வரிசைக்குத் தாவிவிடுகின்றார். ஆனால் இந்தத் துயரக் கதை இன்னமும் நகரவேண்டியிருக்கிறது.

“தேடிக் களைச்சிப் போனன். அவரும் படுக்கையில் விழுந்திட்டார். எழும்பி நடக்க முடியாத நிலைக்கு வந்திட்டார். எனக்கும் வருத்தங்கள். 2015 இல,2 ஆம் மாசம் 21 ஆம் திகதி இப்ப மீன் யாவாரம் செய்யிற சில பேர் மயூரன கண்டதாக வந்து சொல்லிச்சினம். முல்லைத்தீவு மாஞ்சோலை ஆஸ்பத்திரியில மயூரன கண்டிருக்கினம். வேற ஒருத்தர் மயூரனக் கூட்டிக்கொண்டு வந்திருந்தவராம். இன்னொராள் சொன்னது, மயூரன நடுவில விட்டு முன்னும் பின்னுமா ரெண்டுபேர் கூட்டிக்கொண்டு போனதெண்டு. ஒருத்தர் சொல்றார் கூட்டிக் கொண்டந்தவர் முக்கால் ஜம்பர் போட்டிருந்தவராம். இன்னொருத்தர் சொல்றார் கறுத்த ஜீன்ஸ் போட்டிருந்தவராம். 

மயூரன் ஊத்த சரமும், சேட்டும் போட்டிருந்தததாம். நூன் கேட்டன் நீங்கள், யாரும் மயூரனோட கதைக்கேல்லயோ எண்டு. தாங்கள் மெடிக்கல் எடுக்க போனதாம். ஆந்த அவசரத்தில கதைக்கேல்ல எண்டு ஒருத்தன் சொன்னான். இன்னொருத்தன் தான் கதைச்சதாகவும், தான் யூறின் டெஸ்ட் பண்ண வந்ததாம். தடுப்பில இருந்து தன்னைவிட்டிட்டு, திரும்ப பிடிச்சிட்டினம் எண்டு சொன்னதாம். தாங்கள் கதைச்சிக்கொண்டு நிக்க, மயூரனோட வந்திருந்தவர் உடன பக்கத்த வந்து நிண்டிட்டாராம். அவர் தமிழரோ, சிங்களவரோ எண்டு தெரியாதாம்’

“இவங்களும் கண்டபடி மாறி மாறி கதைக்கிறாங்கள். இதுவும் உண்மைபொய் தெரியேல்ல. இவங்கட கதையைக் கேட்டுத்தான் கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில சொன்னனான்.றோஸ்மலர் அம்மாவின் பேச்சு முடிகிறது. மருத்துவரிடம் எழுந்து சென்றுவிடுகிறார். அவர் உள்நுழைந்த அறைக்கதவும் மூடிக்கொள்கிறது. அவர் இருந்த இடத்தை இன்னொரு அம்மா சட்டென நிரப்பிக்கொள்கிறார். அவரிலும் நோய் படர்நிலை ஆழமாகவே தென்படுகிறது. அவரிடம் என்ன கதை இருக்கிறதோ…!

இவ்வாறு மஹிந்தவின் ஆட்சியில் தொலைத்த தமது குழந்தைகளை நூற்றுக்கணக்கான தாய்மார் இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஆட்சி மாற்றம்…நல்லாட்சி…ஐ.நா விசாரணை…புனர்வாழ்வு….மீள்குடியேற்றம் என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களே!

-ஜெரா