மகிந்த அனுமதி மறுத்த ஐ.நா குழுவுக்கு மைத்திரி அனுமதி
காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. வரும் ஓகஸ்ட் 3ம் நாள் தொடக்கம், 12ம் நாள் வரை இந்தக் குழு இலங்கையில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு முன்னர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரியிருந்தது. எனினும், முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தக் குழுவின் பயணத்துக்கு அனுமதி வழங்கவில்லை. புதிய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதையடுத்தே, காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளது.
இந்தக் குழுவினர் இலங்கையில் போரின் போது காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும், இந்தப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆய்வுகளையும், கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளனர்.