தமிழர்களுக்கான இழப்பீடுகளை இந்தியா முழுமையாக பெற்றுக்கொடுக்கும்! சுவாமிநாதன் நம்பிககை
இந்த நாட்டில் தமிழர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்த சமூகமாகும். அவர்களுக்கான இழப்பீடுகளை இந்தியா, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து முழுமையாக பெற்றுக்கொடுக்கும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் பாரதீய ஜனதா கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இல.கணேசன் மற்றும் பா.ஜ.க.வின் தமிழ்நாட்டு பிராந்தியத்தியத்திற்கான பிரதி தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையிலான குழுவினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இல.கணேசன் மற்றும் சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர் இங்கு பல்வேறுபட்ட தரப்பினருடனும் கலந்துரையாடியுள்ளார்கள். என்னுடன் சமகால நிலைமைகள் குறிப்பாக தமிழர்களின் தற்போதைய தேவைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள். இந்தியா, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களின் இழப்பீடுகளை முழுமையாக பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றம்இ காணிகளை மீளக் கையளித்தல்இ உட்பட அவர்களின் வாழ்வாதார விடயங்களை மீளக் கட்டியெழுப்புதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதற்கான அனைத்துவிதமான சலுகைகளையும் வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தயாராக உள்ளது.
குறிப்பாக வடக்கிலே 50ஆயிரம் வீட்டுத்திட்டத்தை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொந்த வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வந்து செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு பகுதி நிறைவுக்கு வந்துள்ளது. எஞ்சிய செயற்பாடுகள் விரைவில் நிறைவுபெறவுள்ளன.
அதேபோன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும், திருகோணமலைக்கும் புகையிரத பாதைகள் அமைப்பு திட்டத்தை நிறைவு செய்து மக்களின் போக்குவரத்திற்கு பாரிய உதவியை வழங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் போக்குவரத்துக்காக செலவிடும் நேரம் மீதப்படுத்தப்பட்டுள்ளதுடன் வடக்கு கிழக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவுப்பாலமாகவும் காணப்படுகின்றது. திருகோணமலையானது சுற்றுலாத்துறையில் பிரசித்தி பெற்றதாக காணப்படுகின்றது. தற்போது போக்குவரத்து துறை மேம்படுத்தப்பட்டதன் காரணத்தால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து அத்துறை மேம்படுவதற்கான வழிவகைகள் ஏற்பட்டுள்ளன.
அதேநேரம் வடக்கில் விதவைகளின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக பயிற்சித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் இன்றைய தினம்(நேற்று) இணக்கம் காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன் மூலம் பெண்களை தலைமைத்து வமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் விதவைப் பெண்களின் வாழ்வாதாரம் கட்டி யெழுப்பப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
இலங்கை, இந்திய உறவுகள் மேலும் வலுப்பெற்று அனைத்து சமூகங்களும் ஒன்றி ணைந்து இலங்கையர்களாக இந்த நாட்டில் வாழ்வதற்காக அரசியல் பொருளாதாரம் உட்பட அனைத்து வழிகளிலும் இந்தியாவின் பங்களிப்பு தொடரவுள்ளது என்றார்.