ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவில் முறைப்பாடு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று நேற்று செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி ஊடகவியலளர் சந்திப்பொன்றை நடத்திய தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளருமாகிய மைதிரிபால சிறிசேன தான் தேர்தலில் வெர்றி பெற்றால் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதாக கூறிய கருத்து இலஞ்சம் என குறிப்பிட்டே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவிற்கு நேற்று மாலை 3.00 மணிக்கு சென்ற மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன் பில தலமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் இந்த முறைப்பாட்டினை அளித்தனர்.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி சட்டத்தின் கீழ், ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்துகொள்ள பதவி தொடர்பிலான உறுதிகளை வழங்குதல், பதவிகளை பொறுப்பேற்றல் போன்றன இலஞ்ச குற்றமாகும். அதன்படி ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன ஜனாதிபதி தேர்தல் வெற்ரிக்காக உழைக்கும் பொருட்டு பதவியொன்றை தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அதன் பின்னர் அந்த பதவியை வழங்கியுள்ளதாகவும் இது அவர் செய்த இலஞ்சம் வழங்கிய குற்றம் எனவும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த முறைப்பாட்டை அளித்த மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில ஊடகங்களிடம் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் 100 நாள் நிறைவு பெற்றுவிட்டது. இனி எமது 100 நாள் திட்டமே உள்ளது. இப்பொழுது முதல் ஒவ்வொரு வாரமும் நாம் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு வந்து அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பிலும் அதற்கு முன்னர் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பிலும் முறைப்பாடுகளைச் செய்வோம்.' என்றார்.