எதிர்காலத்தில் வெளிநாட்டு தலையீடுகள் இருக்காது – ஜனாதிபதி
எதிர்காலத்தில் நாட்டில் வெளிநாட்டு தலையீடுகள் இருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் அல்லது வேறும் தரப்பினர் நாட்டின் விவகாரங்களில் தலையீடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், ஜனநாயகம் உள்ளிட்ட எந்தவொரு விடயத்திலும் தலையீடு செய்ய அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கை என்ற எண்ணக்கருவிற்கு குந்தகம் ஏற்படாத வகையில் மக்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உழைக்கும் மக்களின் உரிமைகள் உச்ச அளவில் உறுதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் பேதங்களை களைந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தம்மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களை சமமாகவே பார்ப்பதாகவும் அனைவருக்கும் நன்மைகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற போதிலும் மக்களை பாதுகாப்பதற்கே அதிகாரங்கள் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவரின் ஆலோசனையின் அடிப்படையிலும் தாம் செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.