காணாமல்போன ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு
ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்ட, காணாமல்போன யுகம் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரசிங்க கொலைசெய்யப்பட்ட, காணமல்போன ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்
வெகுசன ஊடக சீர்திருத்தங்கள் தொடர்பான இரண்டு நாள் தேசிய மாநாடு கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இறுதி நாளான நேற்றையதினம் அம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் தற்போது 2015ஆம் ஆண்டுக்கான வெகுசன ஊடக அபிவிருத்தி பற்றிய மக்கள் அறிவிப்பில் கைச்சாத்திட்டிருக்கின்றோம். இலங்கையில் வெகுசன ஊடகம் மீண்டும் சுதந்திரமான சூழலை அடைந்திருக்கின்றது என்ற இலக்கை அடைவதற்கான விசேட கட்டமைப்பொன்றாகவே அதனைக் கருதுகின்றோம். அத்துடன் சர்வதேச ஊடக வல்லுனர்களின் அறிக்கையொன்றும் என்னிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த காலத்தில் ஊடகங்களுக்கு மிக நெருக்கடியான நிலைமைகள் காணப்பட்டன. சில ஊடகங்க நிறுவனங்களுக்கு பாரிய அழுத்தங்கள் அளிக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். நாட்டை விட்டு வெளியேறினர். லசந்த விக்கிரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். பிரகீத் எக்னெலிய கொட போன்றவர்கள் காணாமல் போனார்கள். ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.
இன்று அந்த யுகம் இல்லாதுபோயுள்ளது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்யப்பட்டதையடுத்தே அந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. நல்லாட்சியில் வெள்ளைவேன் இல்லை, அரசாங்க அழுத்தமில்லை ஊடக நிறுவனங்கள் தாக்கப்படுவதில்லை, என்பதால் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது. அனைவரும் ஒன்று பட்டு எவ்வாறு ஒரு கட்டமைப்பு ரீதியான தீர்வை உருவாக்குவது என்பது தொடர்பில் முடிவுக்கு வரவேண்டும்.
அரசாங்கம் ஊடக சீர்திருத்தம் தொடர்பில் எடுத்துள்ள விடயங்கள் எதிர்காலத்தில் எடுக்கவுள்ள விடயங்கள் தொடர்பாக நேற்று முன்தினம் இங்குள்ள சர்வதேச ஊடக வல்லுநர் குழுவினருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் போது கலந்துரையாடியிருந்தேன். அதன்போது முக்கிய தீர்மானமொன்றை எடுத்திருந்தோம்.
அதாவது, கொலைசெய்யப்பட்ட, காணாமல்போன ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினருடன் கலந்துரையாடி ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். தற்போது காணாமல்போன, கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான எழுத்துமூலமான முறைப்பாடுகளை முன்வைக்கும் பட்சத்தில் அவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்படும்.
வெகுசன ஊடகம் தொடர்பாக அரசாங்கத்திற்கு, ஊடகவியலாளர்களுக்கு பொறுப்புணர்வு காணப்படுகின்றன. அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும். அதேபோன்று ஊடகங்களின் பாதுகாப்பு தொடர்பான அவதானம் செலுத்தவேண்டியுள்ளது. அத்துடன் தொழில் சார் நிபுணத்துவம் வாய்ந்த ஊடகக்கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
ஆகவே அவை தொடர்பாக காணப்படும் பிரச்சினைக்கு தீர்வளிக்கப்பட்டு அச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரத மரான நான் மற்றும் எமது அமைச்சரவை பரிபூரணமான ஆதரவளிப்பதற்கு தயாராக உள்ளோம் என்பதை இவ்விடத்தில் தெரிவித் துக்கொள்கின்றேன் என்றார். அதேநேரம் எதிர்க்கட்சித்தலைவரும் நண் பருமான நிமல் சிறிபால டி சில்வா ஊடக வியலாளர்கள் தொடர்பாக முன்வைத்த சில குறைபாடுகள் தொடர்பிலான கருத்துக் களை நான் ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் சுட்டிக்காட்டினார்.