கைதிகள் விடுதலை தொடர்பில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்! சுமந்திரன் எம்.பி.கூறுகின்றார்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்து வதாகவும் வெகு விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கைதிகள் தொடர்பான அறிக்கையை வெகுவிரைவில் அமைச்சரவையில் சமர்ப் பித்து கைதிகளை விடுவிக்க முடியும் என வும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் தற்போதைய நிலைப்பாட்டினை வினவியபோதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாம் தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பலர் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாது சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களாவார். அதேபோல் சாதாரண குற்றச்சாட்டில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் நாம் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.
பல சந்தர்பங்களில் நாம் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்திடம் காரணங்கள் முன்வைத்துள்ளோம். அதற்கு அமையவே கடந்த காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் கைதிகளின் தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தியுள்ளோம். கைதிகளின் விபரங்கள் தொடர்பில் உண்மையான தகவல்கள் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் விடுதலை செய்வதற்கான சந்தர்பங்கள் அதிகமாகவே உள்ளது. எனவே எமது முயற்சியை நாம் கைவிடப்போவதில்லை.
மேலும் இக் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். எனினும் நீதியமைச்சர் தற்போது இலங்கையில் இல்லாத காரணத்தினால் அவர் நாடு திரும்பியவுடன் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அத்தோடு நாம் சேகரித்துள்ள கைதிகளின் விபரங்கள் தொடர்பிலும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன்பின்னர் அமைச்சரவையில் சமர்க்கவுள்ளோம். எப்படியேனும் வெகு விரைவில் கைதிகளின் விடுதலை தொடர்பில் நல்ல செய்தியை எதிர்ப்பார்க்க முடியும். கைதிகளின் விடுதலை தொடர்பில் அனைத்து முயற்சிகளையும் கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.