இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா விருப்பம்
ஒரு சீனா என்ற கொள்கையையும், தென் சீனக் கடல் விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டையும் முழுமையாக ஆதரிப்பதாக இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சீனப் பாதுகாப்புத் தரப்பிடம் உறுதியளித்துள்ளார்.
சீனா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் நடக்கும், சங்கிரி லா கலந்துரையாடலில் பங்கேற்கச் சென்றுள்ள, இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை, நேற்று முன்தினம் பிற்பகல் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரி அட்மிரல் சன் ஜியான்கூ சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது தென் சீனக்கடல் விவகாரம் தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டை அட்மிரல் விபரித்துக் கூறியிருந்தார். அதற்கு, ருவான் விஜேவர்த்தன, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமாக உள்ளன. ஒரே சீனா என்ற கொள்கையையும், தென் சீனக் கடல் விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டையும் முழுமையாக ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையின் இராணுவ கட்டுமானத்துக்கு சீனா உதவ முடியும் என்றும், இரண்டு தரப்பும் தொடர்ந்து பாதுகாப்பு கலந்துரையாடல்களையும், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகளையும் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அட்மிரல் சன் ஜியான்கூ,
“இரண்டு நாடுகளுக்கும் இடையில், எந்தக் காலத்திலும் நட்புறவை ஏற்படுத்த இலங்கையுடன் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள சீனா விரும்புகிறது. உண்மையான பரஸ்பர உதவிகளையும், பரம்பரை பரம்பரையான நட்புறவையும், உறுதிப்படுத்தும் வகையில், விரிவான மூலோபாய ஒத்துழைப்பை தொடர்ந்து முன்நோக்கி நகர்த்த வேண்டும்.
இலங்கை – சீனா இடையே இராணுவ உறவகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான செயற்பாட்டு அணுகுமுறையை சீனா கொண்டுள்ளது. பரந்துபட்ட அளவில், உயர் மட்டத்தில், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்ய சீனா விரும்புகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.