யாழ், திருமலை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோரக் பொலிசாரால் கைது
இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டுள்ள ஐந்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மீனவர்கள் இந்தியக் கடலோரக் காவல் படையினரால், காரைக்கால் கடலோரக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு நாகபட்டினம் கரையில் இருந்து 36 கடல் மைல் தொலைவில் வைத்து, இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர். கின்சிலி (44), மகாதேவ் (33), சுஜீத் பியந்த (44), மகேஸ்குமார் (22), லியாரா ரமேஸ்(23) ஆகிய ஐந்து மீனவர்களே கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 22ம் நாள் மீன்பிடிக்கச் சென்ற போதே, கோடியாக்கரைக்கு அப்பால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை கைது செய்த இந்தியக் கடலோரக்காவல் படையின் சார்லி-412 ரோந்துக்கப்பல், ஐந்து மீனவர்கள் மற்றும் அவர்களின் சாலிகா என்ற படகையும், காரைக்கால் துறைமுகத்துக்கு கொண்டு சென்று கடலோர காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் எழும்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.