Breaking News

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கிணறுகள் மீளவும் சோதனை

மக்களின் மீள்குடியமர்வுக்காக அனுமதிக் கப்பட்டுள்ள பிரதேசங்களில் தொடர்ச்சியாக குண்டுகள், வெடிபொருள்கள் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன. 

எனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளை மீளச் சோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, மீள் குடியமர்வு தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

 விடுவிக்கப்பட்ட வலி.கிழக்கு வலி.வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொடர்ச்சியாக குண்டுகள், வெடிபொருள்கள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான குண்டுகள், கிணற்றிலிருந்தே மீட்கப்படுகின்றன. இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இராணுவத்தினரின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு மற்றும் ஹலோ ட்ரஸ்ட் என்பன குறித்த பகுதிகளில் ஏற்கனவே சோதனை செய்துள்ளன. 

இருப்பினும் இவ்வாறு மீட்கப்படுவ தனால் அந்தப் பகுதிகளிலுள்ள கிணறுகளை மீளவும் சோதனை செய்வதற்கு அவர்கள் இணங்கியுள்ளனர். இராணுவத்தினரின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரைப் பயன்படுத்தி விரைவில், கிணறுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரச அதிபர் குறிப்பிட்டார்.