கோத்தாவுக்கு எதிராக அடுத்தடுத்துப் பாயவுள்ள குற்றவியல் வழக்குகள்
முறைகேடான வகையில் ஆயுதங்கள் மற்றும் போர்த்தளபாடக் கொள்வனவுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ச பதவியில் இருந்த காலத்தில், இலங்கை விமானப்படைக்காக மிக்-27 போர் விமானங்களை, எந்த அரச நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் வாங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அரசாங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மிக் போர் விமானக் கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து, கடந்தவாரம் உக்ரேனுக்குச் சென்ற விசாரணைக் குழு தகவல்களை சேகரித்துள்ளது. இதன் அடிப்படையில், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன.
அதேவேளை, அவன்ற் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விவகாரத்திலும், நடத்தப்பட்ட விசாரணைகளில், கோத்தாபய ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஆயுதங்களை களஞ்சியப்படுத்தினார், ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் சுமத்தப்படும் என்று தெரியவருகிறது.
அதேவேளை, லங்கா மருத்துவமனை வழக்கிலும் விசாரணைகள் முடிவுக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த வழக்கிலும் கோத்தாபய ராஜபக்ச, அரசாங்க நடைமுறைகளை மீறியது கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, தேசிய கொள்வனவு நடைமுறைகளை மீறி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த லங்கா லொஜிஸ்ரிக்ஸ் மற்றும் ரெக்னொலொஜிக்ஸ் நிறுவனத்தினால் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக, பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் செய்த முறைப்பாட்டில் அடிப்படையில் புதிய விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குறைந்த தரமுள்ள ஆயுதங்கள் கூடிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நடத்தப்படும் விசாரணைகளை வலுப்படுத்துவதற்காக பல்வேறு வழக்குகள் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக பதிவு செய்யப்படவுள்ளன.
இவற்றுள், கடற்படையின் டோறா பீரங்கிப் படகுகளுக்கு, 32 மி.மீ பீரங்கிகளை, இஸ்ரேலிய நிறுவனம், 18.2 மில்லியன் டொலருக்கு வழங்க முன்வந்த போதும், பிரித்தானிய நிறுவனத்திடம் இருந்து அவை 32 மில்லியன் பவுண்சுக்கு கொள்வனவு செய்யப்பட்டது குறித்தும் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது.