வித்தியா வன்புணர்வு ஒரு அனைத்துலக வியாபார முயற்சி – விடமாட்டோம் என்கிறது அரசாங்கம்
புங்குடுதீவில் மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி, அந்தக் காட்சிகளை வெளிநாட்டுக்கு விற்கும் முயற்சியே நடந்துள்ளது என்றும், இதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண சம்பவமாக கணிக்க முடியாது.
நாட்டில் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ள பாலியல் வன்முறை சம்பவங்களைப் போன்று இதனை கருத முடியாது. திட்டமிட்டு வெளிநாடுகளிலிருந்து வந்து மாணவியை சீரீழித்து அதனை ஒளிப்பதிவு செய்து அனைத்துலகத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது.
இதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டியது அவசியம். முதலில் இந்தியாவில் இவ்வாறான திட்டமிட்ட வியாபாரம் இடம்பெற்றது. தற்போது இலங்கைக்கும் வந்துள்ளனர். இதனை சாதாரண விடயமாக கருதவே முடியாது. இந்த விடயத்தில் அரசாங்கம் மிகவும் கவனமாக உயர்ந்த மட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும்.
இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தே தீருவோம்.” என்று தெரிவித்தார். முன்னதாக, மாணவி வித்தியா கொலை தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கத் தேவையில்லை என்றும், அதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், பொது பலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேர்ர் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.