இறுதிப்போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவோம் வடமாகாண தவிசாளர் தெரிவிப்பு
போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாணசபைத் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மே 18ஆம் திகதியை கடந்த அரசாங்கம் போர் வெற்றி நாளாக கொண்டாடி வந்த நிலையில் புதிய அரசு நினைவுதினமாக கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துக் கேட்டபோதே சி.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த போரின் போது உயிர்துறந்த போராளிகள், மாமனிதர்கள் மற்றும் மக்களை நினைவுகூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது. கடந்த காலங்களில் இவ்வாறான நினைவு நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு தடைகளும் நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டு வந்தன.
தற்போதைய அரசாங்கம் போர் வெற்றி நாளை கைவிட்டு மே 18ஐ நினைவு தினமாக கடைப்பிடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் இறுதிப்போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான ஒரு சூழலாக அமைவதாகவே பார்க்கமுடியும். எனவே இறுதிப்போரில் உயிரிழந்த வர்களை நினைவுகூருவோம் என்றும் தெரிவித்தார்.