ரணிலும்- வாசுவும் அரசியல் இலட்சணங்கள்
இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின் உயரிய நிறுவனமாக சட்டவாக்க சபையினை சுட்டி நிற்கின்றதாக பாராளுமன்றம் விளங்கி வருகின்றது.
இன்றைய கால கட்டத்தில் பாராளுமன்றம் எனப்பெயரிடப்படுகின்றதும் சட்டவாக்கச்சபை என்று காணப்படுகின்றதுமான இவ்வுயரிய நிறுவனம் முதல்முறையாக 1833ஆம் ஆண்டில் இலங்கையில் முதலாவது சட்டவாக்கச்சபையாக ஸ்தாபிக்கப்பட்டது.
காலிமுகத்திடலில் கடலை நோக்கி அமைந்துள்ளதான பழைய பாராளுமன்றம் என அழைக்கப்படுகின்ற கட்டிட தொகுதி 1930 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் மேற்படி சட்டவாக்க சபையின் செயற்பாடுகள் அங்கேயே இயங்கி வந்தன. இதன் பின்னர் 1982 ஆம் ஆண்டில் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமையப்பெற்ற புதிய பாராளுமன்ற கட்டிட தொகுதிக்கு இச்செயற்பாடுகள் அனைத்தும் இடம்பெயர்ந்தன.
சட்டவாக்க பேரவையானது 1931 -– 1947 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் 61 உறுப்பினர்களுடன் ராஜ்ய சபையாக செயற்பட்டு 1947 முதல் 1972 வரையான காலப்பகுதியில் பிரதி நிதிகள் சபையாக வளர்ச்சியடைந்தது. பிரதிநிதிகள் சபையில் முதலில் 101 உறுப்பினர்களே அங்கம் வகித்த போதிலும் 1960 ஆம் ஆண்டின் பின்னர் இந்த சபையின் உறுப்பினர்களது எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்தது.
பிரதிநிதிகள் சபையாக இருந்து 1972 முதல் 1978 வரையில் 168 உறுப்பினர்களை கொண்டதாக தேசிய அரசுப்பேரவையாக தோற்றம் பெற்று 1978ஆம் ஆண்டின் பின்னர் 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றமாக தோற்றம் பெற்றது.
இத்தகைய வரலாறுகளையும் அழியாத் தோற்றப்பாடுகளையும் கொண்டமைந்துள்ளதான இலங்கை சனநாயக சோசலிச குடியர சின் 225 மக்கள் பிரதிநிதிகளை கொண்டமைந்துள்ள பாராளுமன்றம் என்ற அதி உச்ச சபையானது இன்று கேலிக்கூத்தாடிகளின் கூடமாகவும் உருப்பெற்று வருகிறது.
கடந்த சுமார் பத்து வருட காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் உயரியத்தன்மைக்கு பாதகம் ஏற்பட்டுள்ளமை வரலாற்றில் பதிந்துள்ளது. அதிலும் 2010ஆம் ஆண்டின் பின்னர் அமைந்ததான ஏழாவது பாராளுமன்றத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளும் அங்கு உறுப்பினர்களது செயற்பாடுகளும் இலங்கை தேச த்தையும் வாக்காளர்களையும் தலைகுனிய வைத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசா ங்கத்தின் ஆட்சிக்காலத்தின் போது பாரா ளுமன்றம் அவ்வரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆதலால் அந்த சந்தர்ப்ப த்தில் எதிர்க்கட்சியின் குரல்கள் பாராளுமன்றத்துக்குள் நசுக்கப்பட்டிருந்தன.
இன்று அந்த நிலைமை தலைகீழாய் மாறிப்போயுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்நாட்டின் இடம்பெற்றதான தேர்தல் புரட்சியின் காரணமாக இந்த தலைகீழ் மாற்றம் உருவானது. அதன் பலனாக பாராளுமன்றம் ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகவும் சுயாதீன சபையாகவும் இயங்கச் செய்வதற்கான வழி வகைகள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளன.
அது மாத்திரமின்றி தேசிய அரசாங்கம் ஒன் றும் அமையப்பெற்றுள்ளது. பாராளுமன்றத் தின் இன்றைய நிலையை பொறுத்த வரையில் அது தேசிய அரசாங்கம் ஒன்றையே கொண்டிருக்கின்றது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து நாட்டின் தேவை கருதி ஏற்படுத்திக்கொள்ளப்படுவதே தேசிய அரசாங்கம் என விளிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்றதான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்தே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
அது மாத்திரமின்றி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனநாயக தேசிய கூட்டணியும் (ஜே.வி.பி) கூட அரசாங்க த்தின் தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகித்திருப்பதன் அடிப்படையில் அக்கட்சிகளும் தேசிய அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்றன.
ஆகையால் தேசிய அரசாங்கம் ஒன்று நாடொன்றில் ஏற்படுத்தப்பட்டிருப்பின் அங்கு எதிர்க்கட்சி என்ற பதமானது வலுவிழந்தே காணப்படுகின்றது. இருப்பினும் இங்கு எதிர்க்கட்சி ஒன்று விரும்பியோ விரும்பாமலோ செயற்பட்டு வருகின்றது. அது மாத்திரமின்றி தேசிய அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமாக வர்ணித்து காட்டப்படுகின்றது.
குறைந்தளவிலான உறுப்பினர்களை கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக தேசிய அரசாங்கத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாலேயே எதிர்க்கட்சியினர் சிறு பான்மை அரசாங்கம் என்று பிரசாரப்படுத்துகின்றனர். இது உண்மையில் படு மோசமான மக்கள் ஏமாற்று நாடகமாகவே இருக்கின்றது.
மக்களை தெளிவடையாமலும் விழிப்படையாமலும் தடுத்து தொடர்ந்தும் அவர்களை முட்டாள்களாக சித்தரித்து காட்டுவதற்கே இன்றைய எதிர்ப்பு அரசியல் வாதிகள் முற்ப ட்டு வருகின்றனர். இன்றைய பாராளுமன்றத்தை பொறுத்தவரையில் கனவான் அரசியல் இலட்சணத்துக்குரியவர்கள் என்று ஒரு சிலரே மிளிர்ந்து வருகின்றனர்.
இவர்களில் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, டியூ குணசேகர, கலாநிதி சரத் அமுனுகம, சபாநாயகர் சமல் ராஜபக் ஷ இரா. சம்பந்தன் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஏ.எச்.எம். பௌசி, மகிந்த சமரசிங்க உள்ளிட்ட சிலரை குறிப்பிட்டுக்கூற முடியும். எனினும் பாராளுமன்றத்தின் கௌரவத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் அதன் உயரியத்தன்மையை கீழ் நிலைப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு பாராளுமன்றத்தை அவப்பெயருக்கு இட்டு செல்வதற்கும் பல உறுப்பினர்கள் செயற்ப ட்டு வருகின்றனர்.
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சில பாராளுமன்றத்துக்கு வருகை தந்த இளையவர்களான சில புதிய எம்.பிக்களின் செயற்பாடுகளே பாராளுமன்றத்தின் உயரிய தன்மையை பாதிக்கின்றன.
கனவான் அரசியல்வாதிகள் என்ற ரீதியிலும் மூத்த அரசியல்வாதிகள் என்ற ரீதியிலும் செயற்படுவதற்கு தவறுகின்ற பல சந்தர்ப்பங்கள் அமைந்துள்ளன. பாராளுமன்ற சம்பிரதாயம், அரசியல் நாகரீகம் என்பவற்றை கற்று தேற வேண்டிய பல சந்தர்ப்பங்கள் பாராளுமன்றத்தில் தவற விடப்படுகின்றன. இன்றைய பாராளுமன்றத்தை பொறுத்த வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் கள் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையிலேயே புதிய அரசாங்க த்தினதும் ஜனாதிபதி ‑மைத்திரிபால சிறிசேன வினதும் நிகழ்ச்சி நிரலுக்கு தடங்கல்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையிலேயே ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் சிலர் உயரிய சபையான பாராளுமன்றத்தை படுக்கை அறையாக மாற்றியமைத்தனர்.
மஹிந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே கனவான் அரசியல் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மீது தண்ணீர் போத்தலால் பாராளுமன்றத்துக்குள்ளேயே தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையிலேயே அமரர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன மீது தாக்குதல் நடத்துவதற்கு எத்தனிக்கப்பட்டிருந்தது.
இந்த அடிப்படைகளின் இன்னொரு வடிவ மாக கடந்த வியாழக்கிழமை முன்னாள் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார என்ற சிரேஷ்ட அரசியல் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்குள் கெட்ட வார்த்தைகளால் தூசித்து அவரையும் அவரது பதவியையும் அகௌரவத்துக்குட்படுத்தியிருந் தமை அமைந்துள்ளது. பிரதமரை பைத்தியக் காரன் என்றும் நீ என்றும் விளித்ததுடன் எழுதுவதற்கே பொருந்தாத கெட்ட வார்த்தை ஒன்றையும் பலமுறை உச்சரித்தது அருவருப்பானது.
முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார 1939ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03ஆம் திகதி பிறந்து 76 வயதில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றார். தொழிற்சங்கவாதியும் சட்டத்தரணியுமான அவர் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவராகவும் தமிழ் பேசும் மக்களின் குரலாகவும் அநீதிகளை தட்டிக்கேட்கும் சிறந்த மனிதராகவும் போற்றப்படுகின்றார்.
இத்தனையும் போதாதென்று இன்னும் பல இலட்சணங்களின் சொந்தக்காரரான வாசு தேவ நாணயக்காரவின் சமகால செயற்பா ட்டு நடவடிக்கைகள் முகம் சுழிக்க செய்கின்றனவாகவே உள்ளன. அரசியல் ரீதியில் நலிவுற்றோரின் நண்பராக இருந்து வரும் வாசு இன்று இனவாத தீ பற்றியெரிவதற்கு எண்ணெய்யாக மாறியிருப்பது ஏற்கத்தகுந்ததாக இல்லை.
வாசுதேவ நாணயக்கார என்ற சிறந்த மனிதர் ஊடாக இன்றைய இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தன்னிலும் வயது குறைந்தவராகவும் இந்நாட்டின் கனவான் அரசியல்வாதிகளின் சிறப்பு மிக்கவராகவும் அதே நேரம் பிரதமர் என்ற உயர் பதவியை வகிக்கின்றவருமான ரணில் விக்கிரமசிங்கவை உயரிய சபைக்குள் தரக்குறைவான வார்த்தைகளால் விளித்து பாராளுமன்றத்துக்குள் பொருத்தமற்றதும் அநாகரிகமானதும் அருவருக்கத்தக்கதுமான தகாதவார்த்தையை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பிரயோகித்தமை வாசுதேவ நாணயக்கார என்ற சிறந்த மனிதரின் சிறப்புத்தன்மையை வீழ்ச்சியடையச் செய்து விட்டதாகவே பார்க்கப்படுகிறது.
அவரது வார்த்தை பிரயோகங்களும் பிரதமரின் மௌனமும் இருவருக்குமிடையிலான பரஸ்பர வித்தியாசத்தை எடுத்துக்காட்டி விட்டது. இந்நிலைமையானது ஐக்கிய தேசியக் கட்சியின் மீதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் மீதுமான காழ்ப்புணர்ச்சித்தனமான செயற்பாட்டை வெளிப்படுத்தி நிற்கிறது.
ஜனவரி மாதம் 8ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து இன்று வரையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பயணத்து க்கு தடையாகவே இருந்து வருகின்றனர். அது மாத்திரமின்றி ஜனாதிபதியின் முகத்தில் கரி யைப் பூசி விடுவதற்கும் அவரது காலை வாரி விடுவதற்குமே முயற்சித்து வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இருக்கின்றமையால் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படுதல் அவசியமாகும். எனினும் மேற்குறிப்பிட்ட இரு தரப்புக்களுமே அவ்வாறு கிடையாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை அவரும் நிரூபித்துக்காட்டியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை தேசிய அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து டிலான் பெரேரா, மஹிந்த யாப்பா அபேவர்தன, பவித்திரா வன்னியாராச்சி, சி.பி.ரட்நாயக்க ஆகிய நால்வரும் விலகிக் கொண்டதுடன் தமது தலைமைக்கு ஏற்காத வகையிலும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். வெகு விரைவிலேயே பாராளுமன்றம் கலை யப் போவது உறுதியாகியுள்ள நிலையிலேயே மேற்படி நால்வரும் அரசாங்கத்தின் பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது.
பாப்பரசர் பரிசுத்த திருத்தந்தையிடமிருந்து எளிமையான அரச தலைவர் எனப்பெயர் பெற்றுள்ளவரானா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமகால அரசியல் களத்தில் மிகவும் மென்மைத்தன்மையுடன் செயற்பட்டு வருகிறார். அவரது இத்தகைய செயற்பாடுகளே இத்தகைய நிலைமைகளுக்கு காரணமாகும்.
நாட்டின் தலைவர் என்ற ரீதியில் சந்தர்ப்பம் அறிந்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதால் தவறுகள் ஏற்பட்டு விடப்போவதில்லை. இருந்த போதிலும் ஜனாதிபதியானவர் தனது துரோகிகளுக்கும் இரங்குபவராகவே திகழ்கின்றார். ஒரு நிமிடத்துக்குள் கரும மாற்றும் வல்லமையும் அவருக்கு உள்ளது என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியினூடாக கிடைக்க பெறுகின்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. அந்த வகையிலமைந்தவாறு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமானால் அது மிக வும் சிறப்பாக அமையும்.
இந்நாட்டின் நீதித்துறைக்கும் கட்டளை பிறப்பிக்கின்ற உயரிய சபையான பாராளுமன்றமானது மேற்போன்ற வரப்பிரசாதங்களைக் கொண்டவர்களால் கேலிக்கூத்து நிலையமாக, கூத்தாடிகளின் கூடமாக மாறுவதற்கு இடமளிக்கக்கூடாது. மக்கள் மத்தியில் கும்பிடு போட்டு தங்களை கனவான்களாக காட்டிக் கொண்டு கௌரவத்தைப் பெற்றுக்கொள்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரது நடவடிக்கைகள், செயற்பாடுகள், வார்த்தைப் பிரயோகங்கள் அனைத்தும் சொல் லால் வர்ணிக்க முடியாத முகச்சுழிப்புக்கு ஒப்பானவை. முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பான செயற்பாடு தொடர்பில் இடது சாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கண்டனம் தெரிவிப்பது ஒருபுறமிருக்க உள்ளுக்குள் வெட்கி நிற்கின்றனர் என்றே கூற வேண்டும்.
பாராளுமன்றத்துக்குள் வாசுதேவ நாணயக்கார எம்.பி.யின் சமகால அரசியல் நிலைப்பாடுகள் அவரது மறுமுகத்தைக் காட்டி நிற்கின்றனவா என்ற சந்தேகமும் எழுந்து நிற்கிறது. கற்ற சமூகத்தைச் சேர்ந்தவருக்கும் அரசியல் மேதைக்கும் இந்த இலட்ச ணம் பொருத்தமானதல்ல என்பதைக் கூற வேண்டும்.
இத்தகைய நிலைமைகளை மக் கள் புரிந்து அறிந்து தெளிதல் இன்றி யமையாததாகவுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்றுக்கு செல்லும்பட்சத்தில் யார் யாரை எப்படியானவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பது என்பது தொடர்பில் மக் கள் உணர்வுபூர்வமான தீர்மானத்துக்கு வர வேண்டும்.
எமது நாட்டின் எதிர்காலம் குறித்து நாட்டு மக்களே சித்திக்க வேண்டும். பட்டம் பதவிக்காக ஏமாற்றுபவன் குறித்து விழிப்பாக இருக்க வேண்டியது மக்களின் கைகளிலேயே உள்ளது. அது மாத்திரமின்றி நாட்டின் நிலைமைகளை அறிந்து கொள்வதற்கு மக்கள் முன்வர வேண்டும். நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பது மக்களால் உணரப்பட வேண்டும்.
அவ்வாறான உணர்வு தூண்டப்படவும் வேண்டும். மக்களே இந்நாட்டின் சக்தி. அவர்களிடம் மாத்திரமே ஆக்கவும் அழிக்கவும் இயலுமை இருக்கின்றது. அடாவடித்தனம் புரிகின்ற அரசியல்வாதிகள், இனவாதிகள், பாசாங்கு காட்டுவோர், நேர்மையானவர்கள், மக்கள் சேவகன், நல்லவன், கெட்டவன் என அனை த்து தரப்பினரையும் மக்கள் அளந்தே வைத்து ள்ளனர் என்பதை புரிந்து கொண்டால் நல் லது.
ஏழாவது பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைகின்றது. எட்டாவது பாராளுமன்றத்திற்கு சிறந்த சமூகத்தை அனுப்பி வைக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளனினதும் கடமையும் பொறுப்பாகவும் அமைகிறது.
-ஜே.ஜி. ஸ்டீபன்