முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில் முயற்சி ஆரம்பம் - டெனிஸ்வரன்
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மக்களுடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு ஜூலை மாதம் முதல் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தும் தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கபடவுள்ளதாக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அமைச்சின் கீழ், விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள், எமக்காக உயிர் நீத்த மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்தவர்கள் ஆகியோருக்கான வாழ்வாதார தொழில் முயற்சிகளை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அவற்றில் சுமார் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தரவுகளின் படி விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 13ஆயிரம் விண்ணப்பங்கள் முழுமையாக கிடைக்கப்பெற்றுள்ளன.
கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் 5 மாவட்டங்களிலும் உரியவர்களை மாவட்ட ரீதியாக சந்தித்து அவர்கள் ஈடுபடவுள்ள தொழில்முறைகளை கண்டறிந்து உள்ளூர் வளங்களை பயன்படுத்தி தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
இவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் கொள்கை ரீதியாக வழங்கப்படும். இதற்கு பிரதமரும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதுடன் இதற்கான முன்னேற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக நாமும் புலம்பெயர்ந்த அமைப்புக்களும் தொண்டர் அமைப்புக்களும் மற்றும் தூதரகங்களும் உதவி செய்ய தயாராக உள்ளனர்.
எனது அமைச்சால் இத்தகையவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதற்கு 43 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளேன். முடிந்தவரை நான் பொதுமக்களுக்கு கூறுவதை செய்து முடிக்க வேண்டும் என்ற நிலையில் செயற்பட்டு வருகின்றேன்.
எதிர்காலத்தில் இத்தகையவர்கள் மற்றவர்களிடம் கையேந்தாத நிலைக்கு அவர்களை உயர்த்துவேன். புனர்வாழ்வு பெற்றவர்கள் ஒவ்வொருவரும் விசேட திறமைகளை கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்ப உதவித்திட்டம் வழங்கப்படும்.
மேலும் பலரும் பல திட்டங்களை பெரும் எடுப்பாக செய்துவரும்போது 3 முதல் 4 மாதத்திற்குப் பின்னர் இவை பலனில்லாத நிலையே காணப்படுகிறது. ஆகவே நாம் வழங்கும் திட்டங்களை முறையாக செயற்படுத்துவதற்கு குழுக்களை அமைத்து கண்காணிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தொண்டு நிறுவனங்கள் இத்தகையவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றன. இவர்கள் திட்ட முன்மொழிவுகளை தந்தால் அதற்கான முழு உதவிகளையும் செய்து தருவதாக தெரிவித்துள்ளன. எனவே நாம் இவர் களுக்கான வேலைத்திட்டங்களை வெகு விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.