Breaking News

குரு பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி? கடகம்

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் 100/75
கிளம்பிட்டார் ஜென்ம குரு தொட்டதெல்லாம் தூள்

அதிகாரத்திற்கு அடிபணிய மறுக்கும் கடக ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சி உங்களை மேலும் உயர்த்தும். இது வரை குருபகவான் உங்கள் ராசியில் இருந்து சிற்சில சிரமங்களைக் கொடுத்திருப்பார். 

குறிப்பாக, குடும்பத்தில் குழப்பமும், பிரச்னைகளும் வந்திருக்கும். தொழில், வேலையில் ஏதேனும் ஒரு பிரச்னையை சந்தித்து கொண்டே இருந்திருப்பர். இந்த நிலையில், குருபகவான் 2-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். 

இதுவரை குருவால் ஏற்பட்டு வந்த இடர்ப்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். இனி தொட்டதெல்லாம் தூள் பறக்கும். 2015 டிசம்பர் 20ல், குரு 3-ம் இடமான கன்னி ராசிக்கு வக்ரமாகி செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. குரு 3-ம் இடத்தில் இருக்கும்போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. 

உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருவின் பார்வைக்கும் கோடி நன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும்.சனிபகவான் 2015 ஜூன் 12 அன்று, வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். 

வக்கிரம் அடைந்து 4-ம் இடத்தில் இருக்கும் சனிபகவான் குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம். ஆனால், வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்கள் குறைந்தே இருக்கும். மேற்கண்ட கிரக நிலையின் அடிப்படையில் ஒட்டு மொத்த பலனைப் பார்ப்போம். பின்தங்கிய நிலை அடியோடு மறையும். 

பொருளாதார வளம் மேம்படும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர்கள் வகையில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிலர் தொழில் காரணமாக குடும்பத்தை வெளியூர் மாற்ற வேண்டியது இருக்கும். புதிய வீடு வாகனம் வாங்கலாம். 

தொழில், வியாபாரத்தில் கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. வருமானம் அதிகரிக்கும். எந்த தொழிலிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அறிவைப் பயன்படுத்தி வருமானத்தை காணலாம். பணியாளர்களுக்கு வேலையில் திருப்திகரமான நிலை இருக்கும். பல்வேறு அனுகூலங்களைப் பெறலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். சிலர் பக்கத் தொழில் செய்து, வருவாயை அதிகரிக்கச் செய்வர். எதிர்பாராத மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

வக்கீல்கள், ஆசிரியர்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். நல்ல வளத்தையும் அடைவர். கலைஞர்கள் புகழும், பாராட்டும் பெறலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணச்செழிப்பிலும் எந்த குறையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சிறப்பு அடைவீர்கள். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடம் பெறலாம். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். 

விவசாயிகள் நல்ல வருவாயோடு மகிழ்வுடன் இருப்பர். மகசூல் அதிகரிக்கும். நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதியசொத்து வாங்கலாம். கால்நடைத்தொழில் செய்பவர்கள் மனநிம்மதியுடன் காணப்படுவர். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். 

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பம் உங்களால் சிறப்பு அடையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பொருட்கள், சொத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். ஆனால், மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடி கொண்டு இருக்கும். 

பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி அளியுங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும். இதன் மூலம் தடையின்றி முன்னேற்றம் அடையலாம்.

உங்கள் இராசிக்கு எப்படி?

மேஷம்                  இடபம்              மிதுனம்            கடகம்        

சிம்மம்                   கன்னி              துலாம்               விருட்சியம்

தனு                          மகரம்              கும்பம்               மீனம்