மெக்சிகோவில் பணயம் வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் உள்ளிட்ட 103 பேர் மீட்பு
மெக்சிகோவில் ஆட்கடத்தல்காரர்களால் வீடு ஒன்றில் பயணக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் உள்ளிட்ட 103 குடியேற்ற வாசிகளை மீட்டுள்ளதாக, மெக்சிகோ காவல்துறை தெரிவித்துள்ளது.
அக்சாபுஸ்கோ என்ற நகரிலேயே, 103 குடியேற்றவாசிகளான பணயக் கைதிகளும் வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சிலர் 5 வாரங்களாக அங்கு பயணக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கை ஒன்றில் இவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதுடன், இவர்களைப் பிடித்து வைத்திருந்த ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முனைந்த இந்த 103 பேரையும், ஆட்கடத்தல் கும்பல் ஒன்று பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தது. இவர்களைக் கடத்தி வைத்து, அவர்களின் உறவினர்களிடம் பயணத் தொகை கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயணக்கைதிகள் தப்பிச் செல்ல முடியாத வகையில், சுற்றிவர மின்சார வேலி அமைக்கப்பட்ட வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 14 சிறுவர்கள் உள்ளிட்ட 103 பணயக்கைதிகளையும் மீட்கும் நடவடிக்கையில் 100இற்கும் அதிகமான காவல்துறையினர் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட பணயக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் ஐந்து பேர் இலங்கையர்கள் என்றும், 23 பேர் இந்தியர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.