Breaking News

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு உதவ 4 கண்காணிப்புக் குழுக்கள்

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மேற்படி ஆணைக்குழுவின் கீழ் நான்கு கண்காணிப்புக் குழுக்கள் இவ்வாரம் நியமிக்கப்படவுள்ளன. 

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு உதவுவதற்காக நான்கு கண்காணிப்புக் குழுக்களை நியமிக்குமாறு மேற்படி ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியிருந்த நிலையிலேயே இவ்வாரத்தி இந்த நான்கு குழுக்களும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில், மேற்படி குழுக்களுக்கு அவசியமான தகவல்களை ஜனாதிபதியிடம் பெற்றுக்கொடுத்ததாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். இதற்கமைய இந்த குழுக்களை ஜனாதிபதி நியமிப்பார் எனவும் அவர் கூறினார். 

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட நிலையில், அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமையவே இந்த கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. 

நான்கு கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஒரு குழுவில் நால்வர் அடங்க வேண்டும் எனவும், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கமையவே, இக்குழுக்கள் நியமிக்கப்படும் எனவும் அதுவும் இவ்வாரமே இக்குழுக்களை ஜனாதிபதி நியமிப்பார் என எதிர்ப்பார்ப்பதாகவும் பரணகம தெரிவித்தார். 

இவ்வாறு நியமிக்கப்படும் கண்காணிப்புக் குழுக்களினால் 16 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பில் கண்காணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 குழுக்களில் அடங்கும் 16 அதிகாரிகளும், உரிய பிரதேசங்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வர். 

இந்த குழுக்களினால் தயாரிக்கப்படும் அறிக்கைகளை கருத்திற்கொண்டு, பிரதான அறிக்கையொன்று தயாரிக்கப்படுவயதோடு அதில் பரிந்துரைகளையும் உள்ளடக்கி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்ப்பார்ப்பதாக மெக்ஸ்வெல் பரணகம மேலும் தெரிவித்தார்.