22 வருடங்களில் பிரேமதாஸவின் நினைவு தினத்தில் கலந்து கொண்ட முதல் ஜனாதிபதி
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஏழை மக்களுக்காக பாரிய சேவையை செய்த ஒரு தலைவர் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 22வது நினைவு தினம் இன்றாகும். இதன் நிமித்தம் புதுக்கடை பகுதியிலுள்ள அன்னாரின் சிலைக்கு அருகில் ஞாபகார்த்த நிகழ்வு இடம்பெற்றது. ரணசிங்க பிரேமதாஸவின் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொள்ளும் முதலாவது ஜனாதிபதி தான் என இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன கூறினார்.
இதேவேளை பிரேமதாஸ இனபேதங்களுக்கு எதிராக செயற்பட்ட தலைவர் என இங்கு கருத்து வௌியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். அத்துடன், பிரேமதாஸ இறந்த போது யாழ்ப்பாணத்திலும் வௌ்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு மக்கள் சோகத்தை வௌிப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பிரேமதாஸ எதிர்பார்த்த சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் ஆட்சி தற்போது உண்மையாகியுள்ளதாக இங்கு உரையாற்றிய அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தில் 700 குடும்பங்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரமும், 1,100 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் திட்டமும் வழங்கி வைக்கப்பட்டன.