20 வது திருத்தத்தை முன்வைக்காமலேயே பாராளுமன்றம் கலைப்பு? அரசு ஆலோசனை
20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்படாமலேயே பாராளுமன்றம் கலைக்கப் படலாமெனவும் அநேகமாக எதிர்வரும் 5ஆம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்குமிடையில் நடை பெறலாமெனவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
அதாவது, 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமாகில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி நிபந்தனை விதித்து 19இற்கு ஆதரவளித்தது. இவ்வாறான நிலையில் சுதந்திரக்கட்சி முன்வைத்தது உட்பட மூன்று தேர்தல் மறுசீரமைப்பு குறித்து பேசப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக செயலமர்வுகள் கருத்தகங்ரங்கள் நடைபெற்று வந்தன.
இவ்வாறான நிகழ்வுகள் குழப்பங்களுடன் எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்துள்ளன. இதே நிலையில், சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத தேர்தல் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்க மாட்டோமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றது.
மேலும், மகிந்த ராஜபக்ஷ தரப்பினரும் தேர்தல் முறை மாற்றத்தை விரும்பாதுள்ளனர். விருப்பு வாக்கு முறைமை இருக்கும்போது தமது வெற்றிக்கான சாத்தியம் உள்ளதால் தேர்தல் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.
இவ்வாறான சூழ்நிலையின் மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு இயங்க முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே, ஜனாதிபதி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் பாராளுமன்றத்தை கலைப்பதாக கூறி வருகின்றார். இது போல் ஜே.வி.பி. உட்பட கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் 100 நாள் முடிவடைந்துள்ளதால் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமென கூறி வெளிப்படையாக அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர்.
எனவே, கட்சிகளுக்குள் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கமில்லாமல் இழுபறியில் இருக்கும் நிலைமையில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வராமலேயே பாராளுமன்றத்தை கலைப்பதெனவும் அநேகமாக எதிர்வரும் 5ஆம் திகதிக்கும் 10ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ளப்படலாமெனவும் அரசாங்க உயர்மட்டங்களில் ஆராயப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து நம்பிக்கையான தரப்பினர் தெரிவித்தனர்.