மாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும் 200 பேருக்கு வேலைவாய்ப்பு - டெனீஸ்வரன்
வடமாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் அடுத்த மாதமளவில் மாகாண சபை அனுமதிக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டதும் மாகாணத்தின் போக்குவரத்து இலகுபடுத்தப்படும். அத்துடன் சுமார் 200பேர் வரையில் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியுமென வடமாகாண சபையின் போக்குவரத்து மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
அமைச்சின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வட மாகாணத்துக்கென வீதி போக்குவரத்து அதிகார சபை ஒன்று உருவாக்கப்படவில்லை. தற்போது இதனை உருவாக்கியுள்ளோம். இதனை சபை அனுமதிக்காக அடுத்தமாதம் அளவில் சமர்ப்பிக்கவுள்ளேன். இந்த உருவாக்கமானது மத்திய அரசாங்கத்தின் சட்டங்களை உள்ளடக்கியதாகவே உள்ளது.
இந்த சட்டம் முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் சுமார் 200பேர் வரையில் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வார்கள் என்றார்.
வடமாகாணத்திற்குட்பட்ட போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் போக்குவரத்தை சுமுகமாக நடத்த மாவட்ட ரீதியில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக் குழுக்களுக்கு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் தலைமையில் பொலிஸாரையும் இணைத்து மாவட்ட போக்குவரத்து பிரச்சினைகள் ஆராய்ந்து நேர அட்டவணை உருவாக்கப்படவுள்ளது.
இத்தகைய பிரச்சினைகள் தீர்வு காணப்பட்டு நேர அட்டவணை பின்பற்றத் தொடங்கியதும் மக்களுக்கான போக்குவரத்து இலகுபடுத்தப்படும். இதன் பின்னர் போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாத தனியார் அரச போக்குவரத்து சேவையில் உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் இவற்றின் பின்னர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு சீருடை வழங்குதல் முதல்கொண்டு பல நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை வடமாகாணத்தில் மீனவர்கள் தொடர்பாக பல நடவடிக்கைகளை மாகாண மற்றும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்காக வடமாகாண கடற்றொழில் தொடர்பான சங்கங்களிடமிருந்து பல கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஏற்ப பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இதில் வடமாகாணத்தில் கடற்றொழில் சங்கங்கள் மற்றும் கிராமிய கடற்றொழில் அமைப்புக்கள் என இரு அமைப்புக்கள் உள்ளன. இதில் எந்தமைப்பு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் தொடர்பிலும் காணப்படும் தெளிவுகள் மற்றும் தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மாகாணத்தில் உள்ள கடற்றொழில் சார்ந்த அமைப்புக்கள் தமது பதில்களை வழங்க வேண்டும்.
இத்தகைய பதில்களை கொண்டு மாகாண கடற்றொழில் அமைப்புக்களை இணைத்து மாநாடு ஒன்றை வைத்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.