நாட்டின் துக்க நாளான மே 18 அறிவிக்கப்பட வேண்டும்
2009ஆம் ஆண்டு மே 18 வன்னிப் பெருநிலப்பரப்பில் போர் முடிந்த நாள். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்த பேரினவாதப் பேய், மனித உடலங்களை உண்டு ஏப்பம் விட்ட நாள். இந்த நாள் தமிழ் மக்களால் என்றுமே மறக்கமுடியாதது.
கொடுவினையின் உச்சமான அனுபவிப்பாக தமிழ் மக்களுக்கு இருந்த இந்த நாள், மகிந்த அரசுக்கு வெற்றி நாளாகியது. பயங்கரவாதத்தை ஒழித்து இலங்கையில் ஒற்றுமையை நிலைநாட்டுவேன் எனச் சூளுரைத்த மகிந்த ராஜபக் தமிழ் மக்களின் இழப்பில், அவர் களின் அவலத்தில் வெற்றிவிழாக் கொண்டாடினார்.
பெற்றோரை இழந்து அம்மா! அம்மா! என்று அழுகின்ற பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்ல எவரும் இல்லாதபோது; குடும்பத் தலைவனைப் பறி கொடுத்து விட்டு ஏதும் செய்ய முடியாது தலையில் அடித்துக் கதறும் அந்த அபலைப் பெண்ணுக்கு உதவுவார் யாரும் இல்லை என்ற நிலையில்;பெற்ற பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு நிலத்தில் வீழ்ந்து அழும் பெற்றோர்களின் அவலத்தை பார்ப்பார் இல்லாதபோது, தலைநகரில் விழாக் கோலம் பூண்டு வெற்றி விழாக் கொண்டாடிய மகிந்த ராஜபக் தனது மனநிலை என்ன? என்பதை உலகிற்கு வெளிப்படையாகக் காட்டி விட்டார்.
அது மட்டுமல்ல, வன்னி பெருநிலப்பரப்பில் உயிர் இழந்தவர்களுக்கு சமய முறைப்படி சடங்குகளைச் செய்வதற்குக் கூட அனுமதி மறுத்த அநியாயம் எந்த நாட்டில் நடக்கும்? போரில் இருந்து தப்பியவர்களை முட்கம்பி வேலிக்குள் வருடக் கணக்கில் அடைத்துவிட, என் பிள்ளை எங்கே? எம் தந்தை எங்கே? தாய் எங்கே? என்று ஏங்கி ஏங்கி சித்தம் செயலிழந்த சோகங்கள் ஒரு புறம்.
காணாமல் போனவர்களை முகாம் முகாமாகத் தேடிய அவலங்கள் மறுபுறமாக, எத்துணை துன்பம். இவற்றை எல்லாம் மறந்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்து விட்டோம் என்ற இறுமாப்பில் வெற்றி விழா நடத்திய ஜனநாயக ஆட்சியின் அழகு எப்படி இருக்கிறது?
வன்னிப்போரில் பலியாகிப்போன அத்தனை பேரும் விடுதலைப் புலிகளா என்ன? 2009 மே 18ஐ இறுதி நாளாகக் கருதி உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்குக் கூட மகிந்த அரசு முற்றாகத் தடை செய்திருந்தது. இது மட்டுமன்றி மே 18இல்; உயிரிழந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நினைவுச்சுடர் ஏற்றும் நிகழ்வு நடை பெற்றபோது, அதனைத் தடுப்பதற்குப் படைத்தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் யாவரும் அறிந்ததே. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் முழுவதிலும் படையினர் குவிக்கப்பட்டு ஒரு போர்க்காலச் சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டது.
போரின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்குக் கூட அனுமதி மறுத்த அநியாயங்களை, தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள். இதேவேளை மைத்திரிபால சிறிசேனவின் அரசு மே 18ஐ வெற்றி விழாவாகக் கொண்டாடாமல் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அனுஷ்டிப்பது என அறிவித்துள்ளமை ஆறுதல் தருவதாகும்.
எதுவாயினும் மே 18 இந்த நாட்டின் துக்க நாள். இந்த நாளில் பொது விடுமுறை வழங்கி நாட்டின் அனைத்து மக்களும் வன்னிப் போரில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது ஒரு ஜனநாயக அரசின் மனிதாபிமான செயற்பாடாகும்.
வலம்புரி