Breaking News

ராஜபக்ஷவினருக்கு வெளிநாட்டில் 18 பில்லியன் சொத்து : வெட்கமின்றி பிரதமர் பதவி கேட்கிறார்!

ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத்துக்களை பதுக்கி வைத்திருப் பதாகவும் அது தொடர்பான தகவல்களை புலனாய்வு பிரிவினர் பெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.  ராஜபக்ஷ குடும்பத்தினரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்க நான்கு வெளிநாடுகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். 

ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களிடம் உள்ள 18 மில்லியன் சொத்து இலங்கையின் ஊழியர் சேமலாப நிதியில் கூட இல்லை என மங்கள சுட்டிக்காட்டியுள்ளார்.  இவை அனைத்தையும் மீட்க நீண்ட காலம் எடுக்கும் என்றும் ஏகாதிபதி ஆட்சி புரிந்தவர்களின் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். 

மொஹமட் கடாபிக்கு வெளிநாட்டில் 80 பில்லியன் டொலர் சொத்து இருப்பதாகக் கூறப்பட்ட போதும் இதுவரை 3.4 பில்லியன் சொத்தே மீட்கப்பட்டுள்ளது. ஹொஸ்னி மொஹமட் வெளிநாடுகளில் 700 பில்லியன் டொலர் சொத்து வைத்திருப்பதாக கூறப்பட்ட போதும் இதுவரை 800 மில்லியன் டொலரே மீட்கப்பட்டுள்ளது. டியூனிசியாவின் பெஸ்லானியாவிடம் 4 பில்லியன் டொலர் சொத்து இருப்பதாகக் கூறப்பட்ட போதும் இதுவரை 69 மில்லியன் டொலர் சொத்துக்களே மீட்கப்பட்டுள்ளதாக மங்கள சுட்டிக்காட்டியுள்ளார். 

ஊழல் செய்தவர்களை தண்டிக்க வேண்டாம் என மக்கள் கூறவில்லை என்றும் ஆனால் அவர்களின் ஊழல்களை தேடிப் பிடித்து தண்டனை வழங்க காலம் செல்லும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். 

நேற்று பாராளுமன்றுக்கு பதுங்கியபடி சென்ற மஹிந்த ராஜபக்ஷ வெட்கமின்றி பிரதமர் பதவி கேட்டதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  மஹிந்த ராஜபக்ஷ தனது சிறந்த நண்பர் என்றும் 70 வயதை தாண்டிய அவர் தற்போது வீட்டில் இருந்து தர்ம உபதேசங்களை கேட்டுக் கொண்டு ஓய்வெடுப்பது சிறந்தது என்றும் அவர் கூறினார். 

100 நாள் வேலைத் திட்டம் வெற்றிகரமாக முடிந்ததாகவும் அதன் இதயம் 19வது திருத்தம் என்றும் ஆனால் நீதிமன்ற தீர்ப்பிற்கு தலைசாய்த்து பணியாற்றியதால் கூறிய அளவு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியாது போனதென மங்கள சமரவீர தெரிவித்தார்.  கடந்த ஆட்சியில் முழு இலங்கையும் கொலைக்காரர்கள் தேசமாக இருந்ததெனவும் அதன்போது இலங்கை சர்வதேசத்தில் தனித்துவிடப்பட்டிருந்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றில் மஹிந்தவின் அவதாரம் ஆவியாக திரிவதாகவும் அதனால் பாராளுமன்றில் உள்ள ஹெரோயின், எத்தனோல், பாலியல் துஸ்பிரயோக, ஊழல்வாதிகள் வரப்பிரசாதம் இல்லாது போய் சாரை பாம்பு மீது மண்ணெண்னை தெளித்தது போன்று துடிப்பதாக மங்கள சமரவீர தெரிவித்தார். 

இதனால் இவர்கள் மீண்டும் தங்களது அழுக்கு அரசியலை முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதற்கு முன்னுதாரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.  தோல்வியுற்ற ஒருவரை பிரதமராக்க சிலர் முயற்சிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ உலகில் உருவான மோசடிமிகு தலைவர் என்றும் ஐதேக, ஜேவிபி, ததேகூ போன்ற கட்சிகளை பிளவுபடுத்திய போது தற்போது ஸ்ரீசுக பிளவுபடுத்த முயற்சிப்பதாக மங்கள சமரவீர குற்றம் சுமத்தினார். 

விரைவில் பொதுத் தேர்தல் நடத்தி புத்திஜீவிகள் மற்றும் பெண்கள் அடங்கிய உயரிய பாராளுமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் தமது தலைவர் மீண்டும் பிரதமராவது உறுதி என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.