Breaking News

சொத்துக் குவிப்பு வழக்கு! மேல் முறையீட்டு மனு மீது மே11ஆம் திகதி தீர்ப்பு

ஜெயதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீதான மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு மே 11ஆம் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. இந்த வழக்கை நீதிபதி சி.ஆர். குமாரசாமி விசாரித்துவந்தார். 45 நாட்கள் விசாரணை நடந்த பிறகு, கடந்த மார்ச் 11ஆம் திகதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியிருந்த உச்ச நீதிமன்றம் மே 12ஆம் திகதிக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என தி.மு.கவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி உத்தரவிட்டது.

தி.மு.கவைச் சேர்ந்த க. அன்பழகனும் கர்நாடக அரசு நியமிக்கும் வழக்கறிஞரும் தங்கள் தரப்பு வாதத்தை எழுத்து மூலமாக தங்கள் வாதத்தைத் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. அன்பழகன் 81 பக்கங்களிலும் கர்நாடக அரசின் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரான ஆச்சார்யா 18 பக்கங்களிலும் தங்கள் தரப்பு வாதங்களைத் தாக்கல்செய்தனர்.

இதற்குப் பிறகு தீர்ப்பை எழுதும் பணியை நீதிபதி குமாரசாமி துவங்கினார். தற்போது மே 11ஆம் திகதி தீர்ப்பு வெளியாகுமென கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இதன் காரணமாக, ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.