போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படம் இலங்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், போர் தவிர்ப்பு வலயம், ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கப் பிரதியொன்று, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அந்த ஆவணப்படத்தை தயாரித்த கலும் மக்ரே தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில், சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டம் ஒன்றில், இலங்கை ஜனாதிபதிக்கான இந்த ஆவணப்படப் பிரதியை கலும் மக்ரே, அதிகாரிகளிடம், ஒப்படைத்தார். இந்த ஆவணப்படப் பிரதியுடன், சிறிலங்கா அதிபருக்கான செய்தி ஒன்றையும், கலும் மக்ரே அனுப்பி வைத்துள்ளார்.
‘உண்மை வெளியே வருகிறது. அந்த செயல்முறைகளை நீங்கள் தடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். உண்மைகளை வெளிக் கொண்டு வரும் செயல்முறைகளை ஊக்குவியுங்கள். உண்மையின் பக்கத்தில் நில்லுங்கள்” என்று இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் கலும் மக்ரே குறிப்பிட்டுள்ளார்.