Breaking News

பிரபாகரனுக்கு அருகில் ஒருதடவையே செல்ல முடிந்தது?- கேணல் ஹரிகரன் பதில்

தனக்குத் தெரிந்தவரையில், இந்திய அமைதிப்படையினரால், ஒரே ஒருமுறை மாத்திரமே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்க முடிந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு முன்னரே தப்பிவிட்டதாகவும், இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போதைய இந்திய வெளிவிவகார இணை அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங், நேற்று முன்தினம் ராய்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியது குறித்து கருத்து வெளியிட்ட போதே, கேணல் ஹரிகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அமைதிப்படையை சிறிலங்காவுக்கு எடுத்த முடிவு கொள்கை ரீதியான உயர்மட்டத் தவறு என்று குறிப்பிட்டிருந்த ஜெனரல் வி.கே.சிங், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க இந்திய அமைதிப்படையினருக்கு பலமுறை சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும், ஒவ்வொரு முறையும் பிரபாகரனை பத்திரமாகத் தப்பிச் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள, இந்திய அமைதிப்படையின் புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியான கேணல் ஹரிகரன், “இந்திய அமைதிப்படையின் இராணுவக் குறிக்கோள்கள் தெளிவாக இருக்கவில்லை.

எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு முறைதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை இந்தியப் படையினர் நெருங்கினர். அப்போது பிரபாகரன் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்திய- இலங்கை உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் அதிக அளவு உயிரிழப்புக்களை சந்தித்தது.

நகர்ப்புறங்களில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை அமைதிப்படை கட்டுப்படுத்தினாலும், காடுகளுக்குச் சென்று பதுங்கிய விடுதலைப் புலிகள் கெரில்லா போர் முறையை கையாண்டு இந்திய அமைதிப்படைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தனர். இந்திய அமைதிப்படை எத்தகைய அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றப் போகிறது என்ற தெளிவில்லாத சூழல் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.