இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதை வரவேற்கிறது அமெரிக்கா
இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
வொசிங்டனில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கப் பதில் பேச்சாளர் மேரி ஹாப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியின் பதவிக்காலம் வரையறுப்பது உள்ளிட்ட சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதையிட்டு அமெரிக்கா திருப்தி கொள்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கப் பதில் பேச்சாளர் மேரி ஹாப், “இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக அதிபரின் அதிகாரங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை நிச்சயமாக நாம் வரவேற்கிறோம்“என்று தெரிவித்துள்ளார்.