மரண தண்டனை விவகாரம்! இந்தோனேசியாவிற்கான தூதுவரை மீள அழைத்தது அவுஸ்திரேலியா
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இரு அவுஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்தோனேசியாவுக்கான தூதரை அவுஸ்திரேலியா திரும்பப் பெற்றுள்ளது.
இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமையன்று இரவில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 8 பேரில் ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் அவுஸ்திரேலியர்கள்.
பிரேசிலைச் சேர்ந்த ரோட்ரிகோ குலார்ட் என்பருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு பிரேசில் அரசு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ரூ சானையும் சுகுமாரனையும் காப்பாற்றுவதற்காக அவுஸ்திரேலியா ராஜதந்திர ரீதியில் பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இது குறித்து செவ்வாய்க்கிழமையன்று கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட், இந்த மரண தண்டனைகள் குரூரமானவை, தேவையற்றவை என்று குறிப்பிட்டார். அவர்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில் முழுமையாகத் திருந்திவிட்டார்கள் என்றும் கூறினார்.
“இந்தோனேசியாவின் இறையாண்மையை மதிக்கிறோம். ஆனால், இதனை நாங்கள் ஏற்கவில்லை. இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக நாங்கள் எங்கள் தூதரைத் திரும்ப அழைத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார் டோனி அப்பாட்.
அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இந்தோனேசியா மிக முக்கியமான ஒரு நாடு. பயங்கரவாதம், புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்றிவருகின்றன.
இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியா தனது தூதரை திரும்ப அழைப்பது இதுவே முதல்முறை. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது, கண்களைக் கட்டிக்கொள்ள 8 பேருமே மறுத்துவிட்டதாகவும் ஒன்றாகப் பாடலை இசைத்ததாகவும், அந்தத் தருணத்தில் உடனிருந்த பாதிரியார் ஒருவர் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.