வடக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு மாணவர் ஒன்றியம் ஆதரவு
வடமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவு தெரிவிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடமாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் தமக்கான நியமனங்களை வழங்க கோரி கடந்த புதன் கிழமையிலிருந்து தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். இப்போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவினை வழங்குகின்றது.
கடந்த முறையும் குறித்த பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எமது ஒன்றியம் பூரண ஆதரவினை வழங்கியிருந்ததோடு சம்மந்தப்பட்ட தரப்பினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தியிருந்தோம.
ஆனால் இற்றைவரை உரிய தரப்பினரால் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் 29.04.2015 புதன்கிழமை காலையிலிருந்து தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இப்போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளை வடமாகாணத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர வேறு எவரும் நேரடியாக சந்திக்காததோடு இதுவரை தங்கள் உறுதியான கருத்துக்களை வழங்காமல் அசமந்த போக்கோடு இருப்பது மிகுந்த மன வேதனைக்குரிய விடயமாகும்.
தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் வந்து உணர்ச்சி பேச்சுக்கள் போலி வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் கோரிக்கைகளை கேளிக்கைகளாக பார்க்கும் எம் அரசியல் தலைமைகளே, எம் பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகளை உரிய தரப்பினரிடம் கொண்டு சென்று விரைவாக அவர்களுக்குரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு நாம் வலியுறுத்துகின்றோம். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.