சீனாவுடன் முரண்பாடு ஏற்பட மகிந்தவே காரணம் – ராஜித குற்றச்சாட்டு
தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவைப் போல, விசாரணை க்குழுவொன்றை நியமித்து, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கலாம் என்று தான் கூறிய ஆலோசனையை மகிந்த ராஜபக்ச நடைமுறைப்படுத்தியிருந்தால், ஐ.நா தீர்மானங்களை தவிர்த்திருக்கலாம் என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.“விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததற்குத் தானே முழுப்பொறுப்பு என்ற மமதை மகிந்த ராஜபக்சவை ஆட்கொண்டிருந்தது.
அது, எவரது ஆலோசனையையும் கேட்கின்ற நிலைக்கு அவரை அனுமதிக்கவில்லை. அந்த அணுகுமுறை தான், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அதிபர் தேர்தலை நடத்தும் முடிவையும் அவரை எடுக்கத் தூண்டியது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை சீன நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டாம் என்று நான் மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறியிருந்தேன்.அவர், நாட்டின் இறைமை மற்றும் இந்த திட்டம் தொடர்பான சட்ட நெறிமுறைகளை கருத்தில் கொண்டிருந்தாரேயானால், இந்த திட்டம் குறித்து இப்போது சர்ச்சை எழுந்திருக்காது.
இப்போது இந்தப் பிரச்சினையை நாம் தீர்க்க முனையும் போது, பல ஆண்டுகளாக எமக்கு உதவிய நட்பு நாடான சீனாவுடன், தேவையின்றி முரண்பட நேர்ந்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.