மகிந்த, கோத்தா விசாரணைக்கு அழைப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை, விசாரணைக்கு வருமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவினால் அழைப்பாணை அனுப்பப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள், மோசடிகள் குறித்து இவர்கள் இருவருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடரிபாக விசாரிக்கவே, இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ச நாளையும், நாளை மறுதினமும் விசாரணைக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 24ம் நாள் ஆணைக்குழு முன் விசாரணைக்கு முன்னிலையாகும்படி கோரப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளதாக, திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணம் தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி ஒருவர், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.