முரண்பாடான கருத்துக்களைப் பரப்பி காலத்தை கடத்தும் கூட்டமைப்பு -டக்ளஸ் குற்றச்சாட்டு
தமக்கு வாக்களித்த மக்களது பிரச்சினைகளைத் தீர்க்காமல், அவற்றைத் தொடர வைப்பதன் ஊடாக தங்களது சுயலாப அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்,
அவர்கள் ஆதரவளித்த புதிய அரசுக்கு எதிரான பிரச்சாரங்களில் தற்போது ஈடுபட்டுவருவதானது, அடுத்த தேர்தலுக்கு அவர்கள் தயாராகின்றார்கள் என்பதையே காட்டுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற வடக்கு கல்வியியலாளர்களுடனான சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வாக்குகளை அபகரித்துக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், வாக்குறுதிகளையும் நிறைவேற்ற நேர்மையாகவும், உண்மையாகவும் செயற்படாமல், அப் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக்கி, மீண்டும் அடுத்த தேர்தலுக்கான மூலதனமாக அதே பிரச்சினைகளை மக்கள் முன் கொண்டு செல்வதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் 30ம் திகதி வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், உரிமைகள், அதிகாரங்கள் எம்மை நோக்கி வருகின்றன எனக் கூறி, இரண்டு நாட்களுக்குள் அதாவது, இம்மாதம் 01ம் திகதி ஐ. நாவின் விசேட அறிக்கையாளர் பாப்லோடி கிரீவ் உடனான சந்திப்பின்போது, மாகாண அரசின் அதிகாரங்களை மத்திய அரசு கட்டப்படுத்தும் விதத்தில் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இப்படியே நாளுக்கு நாள் முரண்பாடான வகையில் கருத்துக்களைப் பரப்பிக்கொண்டே தங்களது காலத்தைக் கடத்துவதைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்துவருகின்றனர். இதுதான் அவர்களது வரலாறு என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.