இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – இந்திய மத்திய அரசு
சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாமென தமிழக மீனவர்களுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதனை நிறுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பம் இதுவென மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை டில்லியில் நேற்று சந்தித்தபோது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துளளார்.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதில்லை என்பதையும், பெருமளவு பணத்தை முதலிட்டு டோலர் படகுகள் மற்றும் வலைகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதாக தமிழக விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் பி சேசுராஜா கூறியுள்ளார்.
ஆனாலும், தமிழக மீனவர்களை விடுவிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதால், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதனை நிறுத்த வேண்டுமென சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இழுவைப் படகுகளின் பாவனையால் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இழுவைப் படகுகளின் பாவனையை ஊக்குவித்த மத்திய அரசாங்கம், தற்போது அதனை நிறுத்துமாறு தெரிவிப்பதனை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழக மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இலங்கைப் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதனை நிறுத்தாதவிடத்து, தமிழக மீனவர்களை விடுதலை செய்வது கடினமானதொரு விடயமென இந்திய வெ ளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியதாக தமிழக விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
இந்திய வெளிவிவகார புதுடில்லியில் நேற்று சந்திப்பதற்கு முன்னர், தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் 80 பிரதிநிதிகள் பாரதீய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளர் பி முரளிதர ராவ்வை சந்தித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.