ஆட்டம் காணுமா புதிய அரசு? -சி.சிறிதரன்
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத்தக்க வகையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றதா என்பது கேள்விக்குறிக்கு உள்ளாகியிருக்கின்றது.
நூறு நாள் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன அணியினருக்கு மக்கள் ஆதரவு வழங்கினார்கள். அந்த ஆதரவின் மூலம், வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். அதேபோன்று தேர்தலுக்கு முன்னர் வாக்களித்திருந்ததன்படி, ரணில் விக்கிரமசிங்கவை அவர் பிரதமராக்கினார்.
தேர்தல் கால வாக்குறுதியின் படி, 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் புதிய அரசாங்கம் ஈடுபட்டிருந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள்; குறைக்கப்பட்டன. முன்னைய ஆட்சியாளரைப் போன்று, இராணுவத்தினருக்கு புதிய அரசாங்கத்தினால் அதிக முன்னுரிமை வழங்கப்படவில்லை. இதனால், இராணுவ மயமாக்கல் நிலைமையில் சிறிது தளர்வு ஏற்பட்டிருந்தது.
இராணுவ பலத்தினால், அச்சமுற்றிருந்த மக்களும், அரசியல்வாதிகளும் ஓரளவு நிம்மதியடைந்தனர். ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழியை நிறைவேற்றும் வகையில் பல விடயங்களில் புதிய அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. பல தில்லுமுல்லுகள், ஊழல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் புற்றீசலைப் போல வெளிக்கிளம்பியிருந்தன.
முன்னைய அராசங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஊழல் நடவடிக்கைகள், அதிகார துஷ்பிரயோகம், முறையற்ற வகையில் அரச நிதிகள் கையாளப்பட்டமை என்பன குறித்து புலனாய்வு பிரிவினர் அவர்களிடம் விளக்கம் கேட்டு, வாக்குமூலங்களைப் பதிவு செய்தார்கள். அதேநேரம், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த வேளை, சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட பலருக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையில் நீதிநெறி, ஆட்சி நெறிமுறைகளை அப்பட்டமாக மீறி, பதவியில் இருந்து பலாத்காரமாகத் தூக்கியெறியப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை புதிய அரசு மீண்டும் பிரதம நீதியரசராக்கியது. முன்னைய ஆட்சியில் அரசியல் செல்வாக்கின் மூலம் பிரதம நீதியரசராக நியமனம் பெற்றிருந்த மொஹான் பீரிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி, நாட்டின் இராணுவத் தளபதியென்ற பதவி அந்தஸ்துக்குரிய மதிப்பு மரியாதைகள் அனைத்தும் பறித்தெடுக்கப்பட்டு, அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் அந்தஸ்துகள் அனைத்தும் புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன. அத்துடன் அதியுயர் கௌரவமாகிய பீல்ட் மார்ஷல் பதவி வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.
எளிமையையும்:, பணிவையும் பின்பற்றி, அரச பதவியில் மக்களுக்கான சேவையை முதன்மைப்படுத்தி புதிய தலைமைப் பண்பை அறிமுகப்படுத்திய பெருமையை புதிய ஜனாதிபதி முதற்தடவையாக நாட்டில் நிலைநாட்டினார். சட்டம் ஒழுங்கை அனைவரும் பேண வேண்டும் என்பதற்கும் முன்னுதாரணமாக நடந்து காட்டி, மக்களின் மனங்களில் அவர் இடம்பிடித்தார். அது மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியிருந்த, மனித உரிமை மீறல், போர்க்குற்றச் செயல்கள் என்பவற்றிற்கு பொறுப்பு கூறும் விடயத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஏற்பட்டிருந்த நெருக்கடியைத் தளர்த்துவதிலும் புதிய ஜனாதிபதி வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கைக்கு எதிராக மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படவிருந்த முக்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதை செப்டம்பர் மாதம் வரையில் பின்போடச் செய்ததன் மூலம், இந்த வெற்றி சாத்தியமாயிற்று. முட்டுக்கட்டைகள் எதிரும் புதிருமாக இருந்து செயற்பட்டு வந்த ஐக்கிய தேசிய கட்சியையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்து தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி, ஐக்கிய அரசாங்கம் ஒன்றிலேயே சென்று முடிவடைந்துள்ளது.
நாட்டில் ஜனநாயகத்தை மேம்படுத்தி நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்ற அவருடைய கனவு எதிர்பார்த்த அளவில் வெற்றி தரவில்லை. ஆயினும் நாட்டின் முக்கிய இரண்டு தேசிய அரசியல் கட்சிகளையும் (அரைகுறையாக இருந்த போதிலும்) தனது தலைமையின் கீழ் ஒன்றிணைப்பதில் அவர் வெற்றியடைந்துள்ளார். ஆயினும் இந்த வெற்றியும்சரி, நல்லாட்சிக்கான அவருடைய ஏனைய முயற்சிகளும் சரி, சிங்கள மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவைப் பெறத் தவறியுள்ளது என்பதையும் அவதானிக்க முடிகின்றது.
பல்வேறு ஊழல்கள். மிகப் பெரும் அளவிலான அரச நிதி மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம், குடும்பத்தினர், குடும்ப உறவினர்களுக்கு அரச பதவிகளையும், அரச வளங்களையும் அள்ளித் தந்திருந்து மோசமான மோசடிகள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியிருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் செல்வாக்கை உடைத்து நொறுக்குவதில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற முடியாத நிலைமையே நீடிக்கின்றது.
நாட்டில் நல்லாட்சியை உருவாக்கி புதிய அரசியல் கலாசாரத்தைக் கொண்டு வருவதற்கான அவருடைய முயற்சிக்கு முன்னாள் ஜனாதிபதியின் முறிந்து போகாத அரசியல் ஆதரவும் அரசியல் செல்வாக்கும் பெரும் சவால்களாக எழுந்து நிற்பதையும் காண முடிகின்றது. நாட்டில் நிலவிய சர்வாதிகாரப் போக்கை மாற்றி, மக்களுக்கு இயல்பு நிலையிலான ஒரு வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்த போதிலும், பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளைத் தோற்கடித்துள்ள யுத்த வெற்றிவாதத்தையும், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத அரசியல் போக்கையும் புதிய ஜனாதிபதியினால் அசைக்க முடியவில்லை.
இதன் காரணமாகத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரச பதவியை இழந்துள்ள போதிலும், சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்கின்றார். இந்த அரசியல் செல்வாக்கானது, நிறைவேற்று அதிகார பலம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையில் ஜனாதிபதிக்கு உள்ள வரையறையற்ற அதிகாரங்களைக் குறைத்து, நாட்டில் பிரதமரின் அதிகாரங்களையும், பாராளுமன்றத்தில் நிரவாக பலத்தையும் அதிகரிக்கச் செய்வதற்கான அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதில் சிக்கல்களை உருவாக்கியிருக்கின்றது.
அரசியலமைப்புத் திருத்தத்துடன், நாட்டின் தேர்தல் முறைமையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிக்கும், முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் செல்வாக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கின்றது.
நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கத்தக்க வகையில் அமைந்திருந்த முன்னைய அரசாங்கத்தின் நிதி கையாள்கை நடவடிக்கைகள், குடும்பத்தின் அரசியல் செல்வாக்கிற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த முறைகேடான நடவடிக்கைகள், சர்வாதிகாரத்தை நோக்கிய ஆட்சிப் போக்கு, நாட்டின் எதிர்கால சுபீட்சத்திற்கு விரோதமான அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள், முழு நாட்டையும் இராணுவமயப்படுத்தலுக்கான செயற்பாடுகள், சீனா, பாகிஸ்தான் போன்ற, அயல் வீட்டு நட்பு நாடாகிய இந்தியாவுக்கு விரோதிகளான நாடுகளுடனான அரசியல் இராணுவ பொருளாதார ஒத்துழைப்புச் செயற்பாடுகள் போன்ற நாட்டின் எதிர்கால சுபீட்சத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தத்தக்க அரசியல் கொள்கைப் போக்கைக் கொண்டிருந்த போதிலும், முன்னைய ஜனாதிபதியின் அரசியல் செல்வாக்கை அடித்து நொறுக்க முடியாத பலவீனமான நிலைமையிலேயே புதிய ஜனாதிபதியும் புதிய 100 நாள் வேலைத்திட்டம் கொண்ட அரசாங்கமும் காணப்படுகின்றது.
இந்த அரசியல் பலவீனம் 100 நாட்களின் பின்னர் நடத்தப்படப்போகின்ற பொதுத்தேர்தலில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. வரப்போகின்ற பொதுத் தேர்தலில் புதிய ஜனாதிபதியின் தலைமையிலான அரசியல் அணியை, பொதுமக்கள் எவ்வளவு தூரத்திற்கு ஆதரிக்கப் போகின்றார்கள் என்பது குறித்து பலதரப்பினரும் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.
ஜனாதிபதி தேர்தலின் ஊடாக நாட்டில், ஜனநாயகத்தை நிலைநிறுத்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இருகட்சிகள் இணைந்த ஓர் அரசாங்கத்தை உருவாக்கி வெற்றிகண்ட போதிலும், பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆணிவேராகிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்விக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசியல் போக்கில் பதில் கிடைக்கவில்லை.
ஆட்சியில் உள்ள கட்சியினரே எதிர்க்கட்சியினராகவும், அவர்களில் ஒருவரே எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற புதுமையான ஜனநாயகக் காட்சியொன்று இந்த அரசாங்கத்திலேயே அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.
பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கட்சியையும் அரசாங்கத்தில் இணைத்து ஐக்கிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கிய பின்னர், எதிர்க்கட்சி எது, எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்விக்கு சாதாரண நடைமுறையில் மட்டுமல்லாமல் ஜனநாயக நடைமுறையிலும்கூட பதிலளித்துச் செயற்பட முடியாத அளவில் புதிய அரசாங்கத்தின் ஜனநாயகப் போக்கு குழப்பம் நிறைந்ததாகக் காணப்படுகின்றது.
அலைக்கழிக்கும் அதிருப்திகள் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளியிட்டு, ஜனநாயகத்தை உயிர்ப்பித்த போதிலும், ஜனாதிபதி தேர்தல் காலச் சூழலில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை முன்னெடுத்து, பதவியைத் தக்கவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்று புதிய அரசாங்கத்தின் தூண்களில் ஒருவராகிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலனாய்வு பொலிஸாரிடம் முறையிட்டிருந்தார்.
அந்த முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டு, விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டிருந்தன. ஆயினும் சந்தேகத்திற்கு உரியவர்களாகக் கருதப்பட்டவர்கள் மீது விசாரணையாளர்கள் உரிய முறையில் விசாரிக்கப்படவில்லை. அவ்வாறு சந்தேகப்பட்டிருந்தால், அவர்களை பொலிஸார் கைது செய்திருப்பார்கள். ஆனால் இந்த முறைப்பாடு தொடர்பில் எவருமே கைது செய்யப்படவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த அந்த அகால வேளையில், முன்னாள் ஜனாதிபதியோடு,; முன்னாள் பிரதம நீதியரசரும் வேறு சிலரோடு இருந்தார் என்பது வெளிச்சத்திற்கு வந்திருந்தது. இது தொடர்பில் ஏனைய முக்கியஸ்தர்களுடன் அவரும் விசாரணை செய்யப்பட்டிருந்தார் என்றும், தேர்தல் முடிவுகளுக்கு விரோதமான முறையில் அதிகரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சதி முயற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால், இந்த விசாரணைகளின் முடிவு என்ன, தொடர் நடவடிக்கையாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, சந்தேகத்திற்கு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதா என்பது போன்ற பலதரப்பட்ட கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் எழுப்பியிருக்கின்றார்கள். நல்லாட்சியையும், ஜனநாயகத்தையும் கொண்டு வரப்போவதாக சூளுரைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த புதிய 100 நாள் அரசாங்கம், ஜனநாயக ஆட்சிக்கு அடிப்படையான, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் இந்த சதிமுயற்சி குற்றச்சாட்டு விவகாரத்தில் ஏன் உறுதியாகச் செயற்படவில்லை என்றும் அவர்கள் வினவியிருக்கின்றார்கள்.
இது ஒருபக்கம் இருக்க, காலி துறைமுகத்தில் மிதந்து கொண்டிருந்த கப்பல் ஒன்றில் ஏகப்பட்ட ஆயுதங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருந்தது என்று சந்தேகிக்கத்தக்க வகையில் கண்டுபிடிக்கப்பட்டமை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால், கையாளப்பட்டிருந்த கற்பனை செய்ய முடியாத அளவில் பெருந்தொகை நிதி முறையற்ற விதத்தில் கையாளப்பட்டிருந்த நடவடிக்கை என்பனவும் இது போன்ற இன்னும் பல நிதிமோசடி நோக்கத்திலான நிதிக் கையாள்கைகள், ஊழல்கள் மோசடிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
இத்தகைய கேள்விகள், ஜனநாயகத்தை நிலைநிறுத்தி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தப் போவதாகத் தெரிவித்த மைத்திரிபால அணியினரின் அரசியல் நோக்கங்களையே வரப்போகின்ற பொதுத் தேர்தலில் ஆட்டம் காணச் செய்துவிடுமோ என்றும் சில தரப்பினர் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்கள். இது ஒரு புறமிருக்க, புதிய ஆட்சியை உருவாக்குவதற்காக ஒத்துழைப்பு வழங்கியிருந்த சிறுபான்மையினராகிய தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரும், அரசு மீது அதிருப்தியடைந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
மைத்திரிபால சிறிசேன அணியினர் தம்முடைய 100 நாள் வேலைத்திட்டத்தில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளை உள்ளடக்கவில்லை என்பது ஆரம்பித்தில் மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆயினும், 100 நாள் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுகின்ற காலப்பகுதியில் முக்கியமாக யுத்தத்தினால் மிக மோசமகாப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பிரச்ச்pனைகள் சிலவற்றின் மீது அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.
அதில் சிறிய அளவில் ஏற்பட்டிருந்த முன்னேற்றத்தை அவர்கள் வரவேற்றிருக்கின்றார்கள். ஆயினும் எரியும் பிரச்சினைகளான இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளைக் கைவிடுதல், காணாமல் போயுள்ளவர்கள், இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயிருப்பவர்கள், உரிய நடவடிக்கைகளின்றி சிறைச்சாலைகளில் நீண்ட நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களில் அவர்கள் அரசு மீது அதிருப்தியடைந்திருக்கின்றார்கள்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை பாதிக்கப்பட்டவர்கள் முற்றாக நிராகரிக்கும் அளவிற்கு இந்த அரசாங்கத்திலேயே அதிருப்தி மேலோங்கியிருக்கின்றது. நம்பிக்கையற்ற உள்ளக விசாரணையைக் கைவிட்டுவிட்டு சர்வதேச நியமங்களுக்கு அமைவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் போராடி வருகின்றார்கள்.
முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்யாமல், அப்படியே ஏற்றுக்கொண்டு, மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளில் தாங்கள் பங்கு கொள்ளப் போவதில்லை, சாட்சியமளிக்க மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்து அதற்கமைவாக அந்த விசாரணைகளைப் புறக்கணித்திருக்கின்றார்கள்.
இதனால், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில்; அந்த விசாரணைக்குழுவின் அமர்வுகள் பயனற்றதாகியிருக்கின்றன. உள்ளக விசாரணை நடவடிக்கைகளுக்கு உள்ளூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மேலும் வலுவூட்டத்தக்க வகையில் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும், அத்தகைய ஒரு விசாரணையை நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும், இதன் மூலம் மாத்திரமே யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை நாட்டில் உருவாக்க முடியும் என்று ஐநா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்தும் அழுத்தங்கள் இப்போது வந்துள்ளன.
முன்னைய அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கல் செயற்பாட்டில் புதிய அரசாங்கம் தளர்வை ஏற்படுத்தியுள்ள போதிலும், புனர்வாழ்வுப் பயிற்சிகளின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும், அவர்கள் தொடர்ச்சியாகப் பின்தொடரப்படுவதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவே முறையிட்டிருக்கின்றார்கள்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து 1000 ஏக்கர் காணிகளை புதிய அரசாங்கம் படிப்படியாக விடுவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அறிவிக்கப்பட்ட வகையில் விடுவிக்கப்படவில்லை என்று வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்குள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களும், மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர்கள் வரையில் பலரும் ஒரே குரலில் தெரிவித்துள்ளார்கள்.
அது மட்டுமல்லாமல், மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்குரிய போக்குவரத்துப் பாதைகளையும் இராணுவத்தினர் முட்கம்பி வேலியிட்டு மறித்திருப்பதாகவும், இதனால் சில இடங்களில் மீள் குடியேறிய மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேவேளை. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதாகவும், இதனால் அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றம் என்பது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தத் தக்க வகையிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
எந்த வேளையிலும் உடனடியாகவோ அல்லது அடுத்த மாதத்திலோ பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடிய அரசியல் சூழலில் சிறுபான்மையின மக்களாகிய தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது கொண்டுள்ள அதிருப்தியும், பெரும்பான்மை இனமக்கள் மத்தியில் பெரிய அளவில் செல்வாக்கைப் பெறுவதற்குத் தவறியுள்ள நிலைமையும், பொதுத் தேர்தலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன என்பது தெரியவில்லை.
இந்த நிலைமைகளை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் புதிய அரசாங்கத் தரப்பினர் அரசியல் உத்திகளைக் கையாள்வதற்குத் தயாராகி வருகின்றார்களா என்பதும் தெரியவில்லை
-செல்வரட்னம் சிறிதரன் -