சர்வதேசத்தின் மத்தியஸ்தம் தமிழரின் தீர்வுக்குத் தேவை
தமிழ் - சிங்கள இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, இலங்கை அரசுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க முன்வருமாறு சர்வதேசத்தைக் கோரும் தீர்மானம் வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை இடம்பெறும் அமர்வில் குறித்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களின் அரசியல் விவகாரம் 65 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தீர்க்கப்படாதிருப்பதையும், போர் முடிவடைந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள போதும் இன்னமும் தீர்வு இழுத்தடிக்கப்படுவதையும், போருக்கான மூல காரணம் சரியாக நோக்கப்படாமல் உள்ளதையும் கவனத்தில் கொண்டும், ஐ.நா. மனித உரிமைகள் சபையின், இலங்கை பற்றிய 2014 ஆம் ஆண்டு மார்ச் தீர்மானமானது
நீதி - பொறுப்புக் கூறல் ஆகியவற்றுக்காக ஐ.நா. தொழில்நுட்ப உதவியை இலங்கைக்கு வழங்க முன்வந்திருப்பதையும் கருத்தில் கொண்டும், இலங்கையில் புதிய அரசு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் வந்திருப்பதைக் கருத்தில் கொண்டும், 1. இலங்கையிலுள்ள தமிழ் - சிங்கள இனப் பிரச்சினையில் சர்வதேச சமூகத்தினதும், ஐ.நா. சபையினதும் வழிகாட்டல்கள், அனுசரணை வழங்கல், மத்தியஸ்தம், உறுதியளிப்பு மற்றும் தீவிர பங்களிப்பு இல்லாமலும் நிரந்தரமானதும் சமத்துவமானதுமான தீர்வு ஒன்றைக் காண முடியாது என இந்தச் சபை உறுதியாக நம்புகின்றது.
2. ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் இலங்கையிலுள்ள தமிழ் - சிங்கள இனப்பிரச்சினைக்கு பேச்சு மூலம் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதை நோக்கி தமது தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்று இந்தச் சபை அழைப்பு விடுக்கின்றது. 3. இலங்கையிலுள்ள தமிழ் - சிங்கள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதை நோக்கியதாக இலங்கை அரசுக்கும் தமிழ் தலைவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க முன்வருமாறு சர்வதேச சமூகத்துக்கு குறிப்பாக ஐரோப்பிய யூனியன், இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுக்கு இச்சபை அழைப்பு விடுக்கின்றது எனக் கோரும் தீர்மானம், ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ளது.