பூட்டான் பிரதமர் இன்று இலங்கை விஜயம்
பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கோ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து, கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கும், பூட்டான் பிரதமருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளன. அத்துடன் பூட்டான் பிரதமர் அநுராதபுரம் மற்றும் கண்டி நகரங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன், பேராதனை பூங்காவிற்கும் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பூட்டான் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று (09) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை கொழும்பு நகரின் சில வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.