Breaking News

தமிழருக்கு எதிரான ஆயுதமாக பாலியல் வன்முறைகள் – பாதுகாப்புச் சபையில் பான் கீ மூன் அறிக்கை

இலங்கையில் போருக்குப் பின்னரும், பாலியல் ரீதியான வன்முறைகள் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

உலகில் பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்தும், இலங்கை உள்ளிட்ட 19 நாடுகள் குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், கடந்த திங்கட்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த அறிக்கையில், தற்போதும் மோதல்கள் நடந்து வரும், ஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொலம்பியா, கொங்கோ ஜனநாயக குடியரசு, ஈராக், லிபியா, மாலி, மியான்மார், நைஜீரியா, சோமாலியா, தென்சூடான், சூடான், சிரியா, யேமன் ஆகிய நாடுகள் குறித்தும்- போருக்குப் பிந்திய சூழலில் உள்ள சிறிலங்கா, பொஸ்னியா-ஹெர்சகோவினா, ஐவரிகோஸ்ட், லைபீரியா, நேபாளம் ஆகிய நாடுகள் குறித்தும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் நடந்து வருகின்றன. அங்கு போருக்குப் பின்னர், ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்து வைப்பு, சித்திரவதைகள், பாலியல் வல்லுறவு, ஏனைய வழிகளிலான பாலியல் வன்முறைகள் என்பன அதிகரித்துள்ளன.

முன்னர் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தவர்களைக் குறிவைத்தே குறிப்பாக இந்த பாலியல் வன்முறைகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக தமிழ்ப் பெண்கள், தமது வாழ்விடப் பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதன் காரணமாக, பாலியல் துஸ்பிரயோகங்களுக்குள்ளாக்கப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

போரின் இறுதி மாதங்களிலும், போருக்குப் பிந்திய காலப்பகுதியிலும், தமிழ்ச் சமூகத்தினருக்கு எதிராக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாலியல் வன்முறைகள் குறித்து விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அரிதாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன ரீதியாக அவமானப்படுத்தும் வகையிலும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்களைக் குறிவைத்தும், பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதாக, தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் சாட்சியமளித்துள்ளனர்.” என்றும் அந்த அறிக்கையில் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில், பான் கீ மூன் தனது பரிந்துரையையும் முன்வைத்துள்ளார். அதில், பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக,சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

போரினால் கணவரை இழந்த பெண்கள், பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீடுகள் உள்ளிட்ட பலதுறை உதவிகளை வழங்குமாறும், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் திட்டங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன் என்றும் பான் கீ மூன் பரிந்துரைத்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் பாக் கீ மூன் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் என்ற தலைப்பிலான அறிக்கையில், சிறிலங்கா உள்ளிட்ட 19 நாடுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மோதல்களின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கவும், பாலியல் வன்முறைகளுக்குப் பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறும், ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.