கடலடி மின்வழித்தட இணைப்பு திட்டம் குறித்து இலங்கையே முடிவெடுக்க வேண்டும் – இந்தியா
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கடலுக்கு அடியிலான மின் வழித்தட இணைப்பை ஏற்படுத்தும், 3000 கோடி ரூபா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் என்று, இந்திய அரசுத் துறை நிறுவனமான பவர் கிரின்ட் கோப்பரேசன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறவனத்தின் பணிப்பாளரான ஆர்.என்.நாயக், புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது,
“இந்தியாவின் பவர் கிரின்ட் கோப்பரேசன் நிறுவனமும், இலங்கையின் மின்சார சபையும் இணைந்து, 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை நிறுவுவது தொடர்பான அறிக்கை, இலங்கைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது.
கடலுக்கடியிலான மின் வழித்தடத்தை ஏற்படுத்துவதற்கான கேபிள்கள் விலைமதிப்பானவை. அடுத்து என்ன செய்வது என்பதை இலங்கை தான் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்தியா- இலங்கை இடையிலான கடலுக்கடியிலான மின் வழித்தடத்தை ஏற்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த 3000 கோடி ரூபா தேவைப்படும் என்றும் இதனை 2013ஆம் ஆண்டில் முடிப்பது என்றும் திட்டமிடப்பட்டது.
பின்னர், இந்த மின் வழித்தடம் 1000 மெகாவாட் கொண்டதாக விரிவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம் 285 கி.மீ நீளமான இந்த மின் வழித்தடத்தில் 50 கி.மீ பகுதி கடலுக்கடியில் நிறுவப்படும். இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையில் மின்சாரத் தேவைகளைப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.