இலங்கை கடலில் தங்கம், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள்!
இந்திய மீனவர்கள் தங்கம், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி செல்வதால் இலங்கை கடலோர காவல்படைக்கும் நமது மீனவர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதற்கு இந்திய கடலோர காவல்படை பொறுப்பேற்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் இந்திய கடலோர காவல்படை துணை இயக்குநர் ஜெனரல் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு கடலில் முப்படை பாது காப்பு வழங்கக்கோரி, வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்திய கடல் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால், மத்திய அமைச்சரவைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக் குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்திய கடலோர காவல்படையின் துணை இயக்குநர் ஜெனரல் கே.ஆர்.நாட்டியாலின் பதில் மனுவை உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் தாக்கல் செய் தார்.
அந்த பதில் மனுவில் கூறியிருப் பதாவது:
இந்திய கடல் எல்லையில் மீன்வளம் குறைந்ததால், நமது மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க தொடங்கினர். இலங்கை போர் முடிவுக்கு வந்த நிலையில், இந்திய மீனவர்கள் தங்கம், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டனர். எந்தெந்த வகையில் மீன்பிடிக்கக் கூடாதோ, அந்த வகைகளை மீன்பிடிக்க பயன்படுத்துகின்றனர். இலங்கை மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துகின்றனர். இந்திய மீனவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதால், அவர்களை இலங்கை கைது செய்கிறது.
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக 2014 ஜனவரி முதல் தற்போதுவரை இந்தியாவைச் சேர்ந்த 185 படகுகள் பறிமுதல் செய்யப்பட் டன. 937 மீனவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இதுதவிர ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கையால் எச்சரித்து அனுப்பப்படுகின்றனர். இது தொடர்பாக இந்திய தூதரகத்துக்கு இலங்கை தகவல் கொடுத்து வருகிறது.
இலங்கை கடல் எல்லையில் அத்து மீறலில் ஈடுபட்ட படகுகளின் பதிவு எண்களை இலங்கை தெரிவித்துள்ளது. அந்த படகுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளோம்.
சென்னை, தூத்துக்குடி, மண்டபம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சர்வதேச எல்லை தாண்டி மீன் பிடிக்கக்கூடாது என்றும், ஆபத்தில் சிக்கினால் உடனடியாக இந்திய கடற்படைக்கு தகவல் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் இந்திய கடல் எல்லையில் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதாக இதுவரை கடலோர காவல்படைக்கு எந்த புகாரும் வரவில்லை. எல்லை தாண்டும் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை நடவடிக்கை எடுக்க முடியாது. எச்சரிக்கை செய்ய மட்டுமே முடியும். பாக் நீரிணை மற்றும் மன்னார் வளை குடா கடல்பரப்பு 160 கடல் மைல் தூரம் உள்ளது.
இதன் காரணமாக, இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டுவதை இந்திய கடலோர காவல் படையால் தடுக்க முடியவில்லை. இந்த மனுவில் மனுதாரர் பட்டியலிட்டுள்ள தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும், இலங்கை கடல் எல்லையில் நடைபெற்றவை. இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்குகின்றனர் என்பது தவறானது.
எல்லை தாண்டி செல்வதால் இலங்கை கடலோர காவல்படைக்கும் இந்திய மீனவர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதற்கு இந்திய கடலோர காவல்படை பொறுப்பேற்க முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மனு மீதான அடுத்த விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.