Breaking News

புதுவருடத்தை முன்னிட்டு ஜனாதிபதி வழங்கிய வாழ்த்துச் செய்தி

இன வேறுபாடின்றி இலங்கையர்களாக ஒன்றிணைந்து புதுவருடப் பிறப்பைக் கொண்டாடுவது, அனைவர் மத்தியிலும் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் பலப்படுத்துவதற்கு உதவியாக அமையுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மலரவுள்ள மன்மத புதுவருடப் பிறப்பை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இன, மத, சாதி வேறுபாடுகளின்றி நல்லாட்சிக்கான அர்ப்பணிப்புடன், நாட்டிலுள்ள சகல இனங்களுக்கு மத்தியிலும் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளுக்கு மத்தியில் இம்முறை புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெறுவது விசேட அம்சமாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சிறந்த சமூகப் பெறுமானங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தங்களின் வாழ்வை வளப்படுத்திய தொன்மைமிக்க மானிடப் பெறுமானங்களுக்கும் இந்த தினத்தில் மக்கள் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த பெறுமானங்களில் மக்கள் மத்தியில் ஐக்கியம், சமாதானம், பகிர்தல் உணர்வு மற்றும் அனைவர் மீதும் நல்லெண்ணம் கொள்ளல் என்பன சிறந்த அம்சங்களாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மதுபானம் மற்றும் புகையிலை பாவனைகளை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு, பிறக்கவுள்ள தமிழ் – சிங்கள புதுவருடம் எல்லா இலங்கையர்களும் மகிழ்ச்சியையும், சுபீட்சத்தையும் கொண்டுவர பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.