ஜனாதிபதியுடன் பேசி சம்பந்தன் எமக்கு விடுதலை பெற்றுத் தரவேண்டும் -அரசியல் கைதிகள் வேண்டுகோள்
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டோர், எவ்வித குற்றமும் அற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விடுதலை செய்த பின்னர் கைதுசெய்யப்பட்டோர், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர்
என்று தம்மில் பலர் ஆறு முதல் பதினெட்டு வருடங்களுக்கு மேலாக சிறையில் வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர் எனவும் - இதனால் தமது குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம், கல்வி, பாதுகாப்பு, பராமரிப்பு, வாழ்க்கைமுறை எல்லாமே சீரழிந்து கொண்டிருப்பதாகவும் - தம்மைப்போன்றே நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையும் மோசமாக உள்ளதாகவும் மனம்வெதும்பியுள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலை அரசியல் கைதிகள். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா ஜனாதிபதியுடன் பேசி, அரசியல் கைதிகள் அனைவருக்கும் விடுதலையை பெற்றுத்தர வேண்டும் என்றும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று புதன்கிழமைநேரில் சென்று கைதிகளுடன் அவர்களது குறைகள், பிரச்சினைகள், தேவைகள் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனும் கலந்துரையாடியபோதே, அரசியல் கைதிகள் மேற்குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மேலும் பெரும்பாலானவர்கள், சட்டத்தின்படி ஒவ்வொரு குற்றத்துக்கும் மேற்பட்ட தண்டனை காலத்தை தாம் அநுபவித்து விட்டனர் எனவும், எனவே இனியும் ‘வழக்குத்தாக்கல் செய்தல், வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தல்’ என்றெல்லாம் பேசி காலம் கடத்தி, தமது எஞ்சியுள்ள வாழ்க்கை காலத்தையும் வீணடிக்காமல் தாம் தமது குடும்பங்களோடு இணைந்து வாழ்வதற்கேற்ப பொதுமன்னிப்பை வழங்கி விடுதலை செய்ய உதவும்படி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிடம், தமது உரிமைகள் விடுதலை தொடர்பில் கரிசனை கொண்டுள்ள ஏனைய அரசியல் கட்சிகள், மனித உரிமை - சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொள்கின்றனர் எனத்தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஆனந்தன் எம்.பி தெரிவிக்கையில் - கடந்த காலங்களில் தென்னிலங்கையில் அதிதீவிர இனவாதம் பேசிய கட்சிகள் பலவும், குறிப்பாக ஜே.வி.பி., ஜாதிக ஹெலஉறுமய கட்சிகள் கூட இன்றைக்கு 'அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் தமது குடும்பங்களுடன் இணைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும்.’ என்பதை ஏற்றுக்கொண்டு, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திவரும் நிலையில், உள உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இனியும் தடுத்து வைப்பதிருப்பதில் எவ்வித நியாயமும் கிடையாது.
எனவே ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து, பெருந்தன்மையோடு மனிதாபிமானத்தோடு அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு முன்னுதாரண செயற்பாடாக ‘அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தை கையாள வேண்டும் - என்றும் ஆனந்தன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.