சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறது கூட்டமைப்பு! டக்ளஸ்
சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தில் அக்கறையற்ற போக்கினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தற்போது இந்த விவகாரத்தில் அரசியல் கலந்திருப்பதாகக் கூறி, மக்களை ஏமாற்றப் பார்க்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பில் நான் ஏற்கெனவே உடுவில் பிரதேச செயலாளர் தலைமையில் துறைசார் குழுவொன்றை அமைத்து, ஆய்வு நடத்தி அதன் ஊடாக அந்நீரில் கழிவு எண்ணெய் படிமங்கள் இருப்பதாகக் கண்டறிந்த பின்னர், இரு அமைச்சரவைப் பத்திரங்களைத் தாக்கல் செய்து, இப்பகுதியை நீருக்கு பாதுகாப்பற்ற பகுதியாக பிரகடனப்படுத்தும் படியும், உயர் மட்ட அமைச்சரவைக் குழுவொன்று அமைக்கப்பட்டு ஆய்வுகள் தொடரப்பட வேண்டுமெனவும், இதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்பட வேண்டுமெனவும், உரிய அதிகாரிகளுக்கு இவ்விடயம் குறித்து அறிவிக்கப்பட வேண்டுமெனவும், அதுவரையில் மாற்று வழிமுறைகளினூடாக இப்பகுதி மக்களுக்கு நீர் வழங்கும் எற்பாடுகள் வேண்டும் எனவும் கோரியிருந்தேன்.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதனிடையே, வடக்கு மாகாண சபை ஒரு நிபுணர் குழுவை நியமித்ததாகவும், அதன் அறிக்கையில் மேற்படி நிலத்தடி நீரில் உடலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய மாசுக்கள் இல்லையென கண்டறியப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தியை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், எமது மக்கள் மத்தியில் குழப்ப நிலையை உருவாக்கிவிட்டனர்.
இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் போன்ற மக்கள் போராட்டங்கள் முன்னெடுத்து வரப்படும் நிலையில், தங்களது தவறுகளை மறைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த விவகாரத்தில் அரசியல் கலப்பு இருப்பதாக கதைவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
மேற்படி விடயம் தொடர்பாக நான் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர், சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்பு இருப்பது தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த நீரை மக்கள் பயன்படுத்தக் கூடாது என்றும், மாகாண சபையின் நிபுணர் குழு அறிக்கையை தான் கேட்டதாகவும், அது இதுவரையில் தனக்குத் தரப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே யாழ். மருத்துவச் சங்கத்தினர் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், இந்நீரில் ஈயம் கலந்திருப்பதாகவும், இதனைப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் நோய்கள் ஏற்படக்கூடும் என்று கூறப்பட்டது. அதேநேரம், கடந்த 9ஆம் திகதி கொழும்பு, வெள்ளவத்தை, தமிழ்ச் சங்கத்தில் கூடிய தமிழ்ச் சட்டதரணிகள் சங்கமும், சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலப்பு பற்றி வலியுறுத்தியுள்ளதுடன், இவ்விடயத்தில் வட மாகாண சபையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் மௌனம் சாதிப்பதாகவும் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
எனவே, தவறான தகவல்களை தங்கள் சுய விளம்பரத்திற்காக பத்திரிகைச் செய்திகளாக வழங்கி, எமது மக்களை குழப்பத்தில் ஆழ்த்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தாங்கள் பெற்ற எமது மக்களின் வாக்குகளுக்காவது அம்மக்களுக்கு நம்பிக்கையானவர்களாக நடந்துகொள்ள முன்வரவேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.