Breaking News

பதவி விலகாவிடின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க்கட்சி எச்சரிக்கை

இலங்கை அரசாங்கம் பதவி விலகாது போனால், அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்ப்போம் என்றும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரித்துள்ளார்.

நேற்று  நாடாளுமன்ற கட்டத் தொகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய முன்னாள் அமைச்சரான குமார வெல்கம,

“செவ்வாய்க்கிழமை அரசாங்கம் கொண்டு வந்த நிதிச் சட்டமூலம் ஒன்றை 21 பெரும்பான்மை வாக்குகளால் எதிர்க்கட்சிகள் தோற்கடித்துள்ளன. எனவே நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து, அரசாங்கம் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்ப்போம்.” என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பெரும்பாலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தினேஸ்குணவர்த்தனவையே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று கோருவதாக, கட்சியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த, சபாநாயகருக்கு அறிவிப்பார் என்று குறிப்பிட்டார்.

 நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே பெரும்பான்மை பலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.