Breaking News

தேர்தலை எதிர்கொள்ள அஞ்சும் சுதந்திரக் கட்சி தலைவர்கள்

தேர்தலின் போது, அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய வரும் ஏப்ரல் 23ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையடுத்து, நாளை முக்கிய கூட்டம் ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போதைய நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியமான தலைவர்கள் பலரும் விரும்பவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையாலும், பிளவுகளாலும், தற்போதைய நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது ஆபத்தானது என்று அவர்கள் கருதுகின்றனர்.

அதேவேளை, 19வது அரசியலமைப்புத் திருத்தத்தை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதும், நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார். இந்தநிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

ஆறு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் செயற்பட மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளதாகவும், அவசரப்பட்டு அதனைக் கலைக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை, 19வது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டால், உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விடும் என்பதால், தேர்தல் முறை மாற்றத்தை உள்ளக்காமல் அதனை ஆதரிக்க முடியாது என்று காரணம் கூறி, அதனை நிறைவேற்ற விடாமல் இழுத்தடிக்கவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முக்கிய கூட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டத்தில் அவரது நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.