வடமாகாண சபையின் செயலர் உட்பட வடக்கு அமைச்சுக்களின் செயலர்களுக்கு இடமாற்றம்
வடக்கு மாகாண சபையின் செயலாளர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஆளுநரால் இடை நிறுத்தி வைக்கப்பட்ட இடமாற்றம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆளுநர் பளிகக்காரவின் உத்தரவிற்கு அமைய இடமாற்றங்கள் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ. ரவீந்திரன் கல்வி அமைச்சின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எஸ். சத்தியசீலன் மீன்பிடி அமைச்சின் செயலாளராகவும் , மீன்பிடி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ. வரகதீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும் , உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சி.திருவாகரன் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை வடக்கு மாகாண சபையின் செயலாளராக கடமையாற்றிய சிவபாதசுந்தரம் பயிற்சி ஒன்றிற்கு செல்லவுள்ளதால் அவருடைய இடத்தை நிரப்புவதற்கு உள்ளூராட்சி ஆணையாளராக பணியாற்றிய ஜெகு மாகாண சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் அனைவரும் கடமைகளை பொறுப்பேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.